காவிரி விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்கின்றன: மு.தம்பிதுரை பேட்டி
By DIN | Published On : 04th January 2019 01:40 AM | Last Updated : 04th January 2019 02:54 AM | அ+அ அ- |

காவிரி மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றன என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார்.
இது தொடர்பாக தில்லியில் "தினமணி' செய்தியாளரிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது; இந்த விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்காக அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுகவினர் குரல் கொடுத்து வருகிறோம். புதிய அணை கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும், இந்த விவகாரத்தில் காவிரி தொடர்புடைய பிற மாநிலங்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் டிபிஆர் அறிக்கையைத் தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். காவிரி விவகாரம் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாகும். காவிரியின் குறுக்கே முன்னரே பல அணைகள் கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் வந்தால் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் தருவதில்லை. இந்நிலையில், மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்.
இச்சூழலில் தேசிய கட்சிகளாக கூறிக் கொள்ளும் பாஜகவும், காங்கிரஸும் கர்நாடகத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றன.
ஆகவே, கர்நாடக மாநிலத்திற்கு டிபிஆர் தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெறும் உறுதியை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்க வேண்டும் ஆகவேதான், தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் என்கிற அடிப்படையில் அதிமுகவினர் கடமைகளை செய்து வருகிறோம். இந்த உணர்வுக்கு மத்திய அரசு உடனடியாக மதிப்பளிக்க வேண்டும்.
இதற்கு காங்கிரஸும் அதற்குத் துணையாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தின் ஆழத்தை தமிழக திமுக, காங்கிரஸ் கட்சிகள் புரிந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு அழுத்தம் தர வேண்டும்.
ராகுல் காந்திக்கு காவிரி விவகாரம் குறித்து நன்றாகவே தெரியும் என்பதால் அவர் கர்நாடக அரசை வற்புறுத்தி தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வழி காணலாம் என்றார் அவர்.