தில்லி பேரவையில் அமளி: 3 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: ராஜீவ் காந்திக்கு விருது விவகாரம்

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி, பின்னர் அதில் ஆம் ஆத்மி அரசு திருத்தம் செய்ததாக குற்றம்சாட்டி பாஜக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை கூடிய தில்லி பேரவைக் கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, விஜேந்தர் குப்தா, ஜெகதீஷ் பிரதான், மன்ஜீந்தர் சிங் சிர்சா ஆகிய மூன்று பாஜக எம்எல்ஏக்களையும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். 
கடந்த சிறப்புக் கூட்டத் தொடரில் (டிச. 20,21) சீக்கியர்கள் படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை நியாயப்படுத்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதை திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. 
இந்நிலையில், நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில் ராஜீவ் காந்தி தொடர்பாக ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆம் ஆத்மி மறுப்புத் தெரிவித்தது. இதை அவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயலும் ஆதரித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முறையற்ற வகையில் மாற்றங்களை செய்ய அவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் ஒப்புக் கொண்டுள்ளார் என்று பாஜக குற்றம் சாட்டியது. 
இந்நிலையில், தில்லி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை அவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் தலைமையில் தொடங்கியது. அப்போது, அவையில் நிறைவேற்றப்பட்ட ராஜீவ் காந்தி தொடர்பான தீர்மானத்தில், முறைகேடான வகையில் மாற்றங்களை அனுமதித்த தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயலை நீக்கக் கோரி பாஜக எம்எல்ஏ மன்ஜீந்தர் சிங் சிர்சா நோட்டீஸ் அளித்தார். ஆனால், 14 நாள்களுக்கு முன்பு அனுமதி பெற்றே நோட்டீஸைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறி ராம்நிவாஸ் கோயல் மறுப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தில்லி பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தர் குப்தா, ஜெகதீஷ் பிரதான், மன்ஜீந்தர் சிங் சிர்சா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். 
சிர்சா, அவையின் மையப் பகுதியில்அமளியில் ஈடுபட்டார். அவைத் தலைவர் பல முறை கேட்டுக்கொண்டும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டததுடன், அவையை 15 நிமிஷங்களுக்கு ஒத்தி வைத்தார். 
நடவடிக்கைக்கு பரிந்துரை: பின்னர் அவை மீண்டும் தொடங்கிய போது, அவையில் மன்ஜீந்தர் சிங் சிர்சா நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து சிர்சா மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவர் பரிந்துரைத்தார்.
இந்திரப் பிரஸ்தா தகவல் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின் 2016-17 நிதியாண்டுக்கான தலைமைக் கணக்கு தணிக்கை (சிஏஜி) அறிக்கை, தில்லி அரசின் நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவையில் தாக்கல் செய்து பேசினார்.

5-வது நிதிக்குழு மோசடி: பாஜக
"5-வது நிதிக் குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவதாகக் கூறி தில்லி அரசு மோசடியில் ஈடுபட்டுள்ளது' என்று பாஜகவின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார். அவர் கூறியதாவது: 
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநகராட்சிகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் 5-வது நிதிக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தில்லி அரசு கூறுகிறது. அந்த அறிக்கையில், மாநகராட்சிகளுக்கு சாதகமான 29 பரிந்துரைகளை தில்லி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மாநகராட்சிகளுக்கு ஒதுக்கும் நிதியை 10.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தில்லி அரசு பொய் கூறுகிறது. உண்மையில், 17 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைத்துள்ளது என்றார் அவர். 


தலைப்பாகையை அகற்றியதாக சிர்சா புகார்
"சீக்கியர்களின் அடையாளமான தான் அணிந்துள்ள தலைப்பாகையை அவைக் காவலர்கள் அகற்றினர்' என்று தில்லி பாஜக எம்எல்ஏ மன்ஜீந்தர் சிங் சிர்சா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பின்னர் ஆம் ஆத்மி மறுப்புத் தெரிவித்தது. ஆம் ஆத்மியின் கூறும் இந்த பொய்க்கு அவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயலும் உடந்தையாக உள்ளார். இதனால், அவைத் தலைவராக நீடிக்கும் தார்மிக உரிமையை அவர் இழந்து விட்டார். அவரை பதவிநீக்கம் செய்யுமாறு அவையில் நோட்டீஸ் கொண்டுவந்த என்னை அவையை விட்டு அவைக் காவலர்கள் மூலம் வலுக்கட்டாயமாக நீக்கியுள்ளனர். சீக்கிய மதத்தின் அடையாளமாக நான் அணிந்துள்ள தலைப்பாகையை அவைக் காவலர்கள் நீக்கியுள்ளனர். என்னைத் தாக்கியுள்ளனர். சீக்கியர்களைசட்டபேரவையில் ஆம் ஆத்மிக் கட்சி அவமதித்துள்ளது' என்றார். 

சீலிங்: அவசர சட்டத்துக்கு வலியுறுத்தல்
தில்லியில் நிலவும் சீலிங் நடவடிக்கை தொடர்பாக பேரவையில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ் பேசுகையில், "கிரேட்டர் கைலாஷ், சவுத் எக்ஸ்டென்ஸன், டிஃபன்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் உருமாற்றக் கட்டணமாக பல கோடி ரூபாயை தெற்கு தில்லி மாநகராட்சி வசூலித்துள்ளன. ஆனால், 21.06.2018- இல் அமல்படுத்தப்பட்ட தில்லி மாஸ்டர் பிளானின் படி இந்தப் பகுதிகளில் உருமாற்றக் கட்டணத்தை வசூலிக்க முடியாது. ஆனால், வணிகர்களை ஏமாற்றி மாநகராட்சி அதிகாரிகள் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துள்ளனர். இப்பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்றார். இந்த விவாதத்தில், ரிதுராஜ் கோவிந்த், ராஜேஷ் குப்தா, சரித்தா சிங், அனில் குமார் பாஜ்பாய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பேசுகையில் "தில்லியில் நடைபெறும் சீலிங் நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com