தில்லியில் மீண்டும் கடுமையான பிரிவில் காற்றின் தரம்!

தலைநகர் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்து மீண்டும் கடுமையான பிரிவுக்குச்


தலைநகர் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்து மீண்டும் கடுமையான பிரிவுக்குச் சென்றது. வெள்ளிக்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை சாதகமற்ற வானிலை சூழல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 417 ஆக உயர்ந்து கடுமையான பிரிவுக்கு வந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 20 இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும், 8 இடங்களில் மிகவும் மோசம் எனும் பிரிவிலும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதியில், காஜியாபாத், ஃபரீதாபாத், குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்ததாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றில் 2.5 நுண்துகள் அளவு 298 ஆகவும் 10 பிஎம் நுண்துகள் அளவு 468 ஆகவும் பதிவாகியிருந்ததாக புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 வரை இருந்தால் மிதமான பிரிவு எனவும், 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401 முதல் 500 வரை இருந்தால் கடுமை பிரிவு எனவும் காற்றின் தரம் கணக்கிடப்படுகிறது. 
காற்றின் தரம் மீண்டும் கடுமையான பிரிவுக்குச் சென்றதற்கு சாதகமற்ற வானிலை சூழல்தான் காரணம் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், தூறல் மழை பெய்யும் போது, காற்றின் வேகம் குறையும்பட்சத்தில் காற்று மாசு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) கூறுகையில், காற்றின் வேகம் அதிகரிக்கும்பட்சத்தில் பனிமூட்டம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு தடை: இதனிடையே, உச்சநீதிமன்றம் நியமித்துள்ள சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுஆணையம் (இபிசிஏ), தேசியத் தலைநகரில் சரக்கு வாகனங்கள் நுழைவதற்கு 24 மணிநேரம் தடை விதித்து இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதில் சரக்கு வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்கு வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை இரவு 11 மணி வரை அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலருக்கு இபிசிஏ தலைவர் புரே லால் எழுதியுள்ள கடிதத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்தில் தில்லிக்குள் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிவரும் வாகனங்கள் தவிர்த்து மற்ற சரக்கு வாகனங்கள் வருவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, நவம்பரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றதால், இதுபோன்ற ஓர் உத்தரவை இபிசிஏ பிறப்பித்திருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி!
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை பருவ சராசரியை விட இரண்டு டிகிரி குறைந்து 5.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயர்ந்து 21.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது என்று சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை பாலத்தில் 7.6 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 6.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. 
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் சஃப்தர்ஜங்கில் 100 சதவீதம், பாலத்தில் 95 சதவீதம், ஆயாநகரில் 89 சதவீதம் என இருந்தது. மாலை 5.30 மணியளவில் சஃப்தர்ஜங்கில் 71 சதவீதம், பாலத்தில் 65 சதவீதம், ஆயாநகரில் 55 சதவீதமாக இருந்தது. அடர்பனிமூட்டம் காரணமாக பாலம் மற்றும் சஃப்தர்ஜங்கில் காண்புதிறன் காலை 5.30 மணியளவில் 400 மீட்டராக இருந்தது. பின்னர், காலை 8.30 மணியளவில் பாலத்தில் 50 மீட்டராகவும், சஃப்தர்ஜங்கில் 400 மீட்டராகவும் இருந்தது. 
முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
13 ரயில்கள் தாமதம்
தில்லி உள்பட வடமாநிலங்களில் அடர் பனிமூட்டம் நிலவி வருவதால், தில்லி உள்பட வடமாநிலங்களில் கடந்த வாரம் முதல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை 13 ரயில்கள் சராசரியாக சுமார் 2-3 மணி நேரம் தாமதமடைந்ததாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. மால்டா - புதுதில்லி ஃபராக்கா எக்ஸ்பிரஸ், கயா-புதுதில்லி மஹபூதி எக்ஸ்பிரஸ், ஹெளரா - புதுதில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், ஜாய்நகர் - ஆனந்த் விஹார் கரீப் ரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும். அதே சமயம், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்குவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com