உலகப் புத்தகக் கண்காட்சியில் அலைமோதிய கூட்டம்!

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 28-ஆவது புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சியின் இரண்டாவது

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 28-ஆவது புது தில்லி உலகப் புத்தகக் கண்காட்சியின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுமார் 80 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் புத்தகக் கண்காட்சியில் வாசர்கள், புத்தக ஆர்வலர்களின் கூட்டம் அலைமோதியது. 
நிகழ் ஆண்டின் புத்தகக் கண்காட்சி "புக் ஃபார் ரீடர்ஸ் வித் ஸ்பெஷல் நீட்ஸ்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. இதற்காக தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 பிரெயில் புத்தகங்கள், ஒலிநூல்கள் இடம்பெற்றுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் குறித்த உரையாடல்கள், கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. அதுதவிர, மாற்றுத்திறனாளிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரவலாக லேசான மழை பெய்ததைத் தொடர்ந்து, குளிரின் தாக்கம் அதிகரித்தது. இதைப் பொருள்படுத்தாமல், புத்தகக் கண்காட்சியில் கூட்டம் அலைமோதியது. 
அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது அல் அமேரி பேசுகையில், "குறைந்த லாஜிஸ்டிக் கட்டணச் சலுகையை இந்திய பதிப்பக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
ஷார்ஜா புத்தக ஆணையத்தின் துணைத் தலைவர் அலி அல் ஷாலி பேசுகையில், "பதிப்பகத் துறையில் ஷார்ஜா செலுத்தி வரும் கவனம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவுகளில் ஒன்றான படைப்பாற்றல் துறையில் ஷார்ஜா உலகின் முக்கிய மையமாக மாறி வருகிறது' என்றார். இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) செகரட்டரி ஜெனரல் திலீப் செனாய் பேசுகையில், "உலகில் ஆங்கிலப் புத்தகங்கள் பதிப்புத் துறையில் இந்தியா 2-ஆவது இடத்தில் இருந்து வருகிறது' என்றார்.
இந்தியா ஆசியா பசிபிக் நீல்சன் நிறுவனத்தின் இயக்குநர் விக்ராந்த் மாதூர் பேசுகையில், "புத்தகப் பதிப்புத் துறையில் ரூ.24 பில்லியன் அளவுக்கு இந்தியாவின் பங்களிப்பு உள்ளது. ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக உள்ளது' என்றார்.
 இதைத் தொடர்ந்து பதிப்புத் துறையில் இந்திய -அமீரக ஒத்துழைப்பு என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. இதில், கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ரத்னேஷ் ஜா ஒருங்கிணைக்க, சயோனி பாசு, அதித்யா ஜைய்தி, ரவி தி சி ஆகியோர் பங்கேற்றனர். ஐக்கிய அரசு அமீரகத்திலிருந்து அலி அல் ஷாலி, தாமிர் அல் சையது, காலிமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
குழந்தைகள் அரங்கம்: இதுபோல, குழந்தைகள் அரங்கத்தில் குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர்கள் தேவேந்திர மேவாரி, மஞ்சரி சுக்லா ஆகியோர் கதைகளை சொல்லி நிகழ்ச்சிகளை வழங்கினர். இதில் நொய்டா காதுகேளாதோர் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி, காந்தி குறித்த கதை சொல்லும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. வேத் மித்ரா, ஜெய்ஸ்ரீ சேதி உள்ளிட்டோர் காந்தி குறித்த கதைகளை கூறினர். ஜனவரி 13-ஆம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ. 10, பெரியவர்களுக்கு ரூ. 20 என்ற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. முதியோருக்கும் ஆசிரியருடன் வரும் பள்ளி மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அனுமதி இலவசம். புத்தகக் கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com