ரயில் நிலையங்களில் செல்லிடப்பேசி சிக்னலை அதிகரிக்க டிஎம்ஆர்சி நடவடிக்கை

சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்லிடப்பேசி சிக்னல் தொடர்பு வசதியை

சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்லிடப்பேசி சிக்னல் தொடர்பு வசதியை அதிகரிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) எடுத்து வருகிறது.
இதற்கான பணியில் இரவு நேரங்களில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியாளர்கள் சுரங்கப்பாதையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் குறிப்பாக பிங்க், மெஜந்தா ஆகிய வழித்தடங்களில் எள்ள ரயில் நிலையங்களில் சிக்னலை அதிகரிக்கும் பூஸ்டர் கருவிகளை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழித்தடத்தில்தான் செல்லிடப்பேசி சிக்னல் வசதி குறைவாக இருப்பதாக பயணிகளிடமிருந்து டிஎம்ஆர்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (கார்ப்பரேட் கம்யூனிஸ்கேஷன்ஸ்) அனூஜ் தயாள் கூறியதாவது:
பிங்க் மற்றும் மெஜந்தா வழித்தடங்களில் செல்லிடப்பேசி சிக்னல் தொடர்பு வசதியை வழங்குவதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த இரு வழித்தடங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சிக்னல் தொடர்பு பிரச்னை உள்ளது. மேல்நிலை மெட்ரோ ரயில் நிலையங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சிக்னல் கிடைத்து வருகிறது. பிங்க் வழித்தடத்தில் முற்றிலும் தரைக்கடியில் உள்ள பிகாஜி காமா - ஹஜ்ரத் நிஜாமுதீன் வழித்தடப் பிரிவில் தற்போது இதற்கான பணி நடைபெற்று வருகிறது.
மெஜந்தா வழித்தடத்தில் கல்காஜி மந்திர் மற்றும் ஜனக்புரி மேற்கு இடையே உள்ள பகுதியிலும் பிரச்னை உள்ளது. இதேபோல, புளூலைன், யெல்லோ லைன் மற்றும் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய வழித்தடங்களில் சில குறிப்பிட்ட சுரங்கப்பாதையில் உள்ள இடங்களில் இதே பிரச்னை இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏஐ) இது தொடர்பாக சர்வே எடுக்குமாறு கேட்டுக்கொண்டது. இந்த சர்வே அடிப்படையில் சிக்னல் குறைவாக கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களில் ஏற்கெனவே பூஸ்டர் கருவிகளைப் பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதே தொழிநுட்பத்தை ஐ.டி.ஓ. ரயில் நிலையம் உள்பட வயலட் லைன் பிரிவிலும் பயன்படுத்தியுள்ளோம்.
இதற்கான பணிகள் அனைத்தும் ரயில்கள் இயக்கம் இல்லாத இரவு நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. பிற அனைத்து மெட்ரோ வழித்தடங்களிலும் மொபைல் தொடர்பு வசதி கிடைத்து வருகிறது என்றார் அவர்.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) கடந்த 2018-இல் பிங்க் லைன் வழித்தடத்தில் துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் - லாஜ்பத் நகர் பிரிவு இடையே செயல்பாடுகளைத் தொடங்கியது. மஜ்லிஸ் பார்க் - துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் பிரிவு மார்ச்சில் செயல்படத் தொடங்கியது. பிங்க் வழித்தடத்தின் லாஜ்பத் நகர் - மயூர் விஹார் பிரிவானது கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. அதேபோல, மயூர் விஹார் பாக்கெட் 1 மற்றும் திரிலோக்புரி சஞ்சய் லேக் இடையேயான 1.4 கிலோ மீட்டர் பிரிவு இன்னும் தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com