சுடச்சுட

  

  அலோக் வர்மா ராஜிநாமா விவகாரம்: பிரதமர் மீது கேஜரிவால் கடும் சாடல்

  By DIN  |   Published on : 12th January 2019 11:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்தே, சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மாவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடுமையாகச் சாடியுள்ளார்.
  ஊழல் புகாரைத் தொடர்ந்து, சிபிஐ இயக்குநராக பதவி வகித்து வந்த அலோக் குமார் வர்மாவை அப்பதவியிலிருந்து பிரதமர் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். 
  இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ இயக்குநராக அலோக் குமார் வர்மா கடந்த புதன்கிழமை பொறுப்பேற்றார். சுமார் 77 நாள்களுக்குப் பிறகு சிபிஐ அலுவலகத்துக்கு வந்த அவர், இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்திருந்த பணியிட மாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதிவியிலிருந்து விடுவித்து மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படையின் இயக்குநராக நியமித்தத்து. ஆனால், அவர் அப்பதவியை ஏற்காமல் ராஜிநாமா செய்தார்.
  இந்நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று முதல்வர் கேஜரிவால் சாடியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறியதாவது: 
  அலோக் குமார் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக நியமிக்கும்படி உச்ச நீதிமன்றம் இரண்டு நாள்களுக்கு முன் உத்தரவிட்டது.
  ஆனால், நீதிமன்றம் தெரிவித்த யோசனையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உயர் நிலைக் குழு, அவரை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து விடுவித்துள்ளது. ஆனால், அப்பதவியை அவர் ஏற்காமல் ராஜிநாமா செய்துள்ளார்.
  ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் கூறி வருகின்றனர். அப்படியானால், தன் மீது தவறு இல்லை என்றால் ஏன் அலோக் குமார் வர்மாவை நீக்க வேண்டும். 
  ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை நடத்த அலோக் குமார் வர்மா உத்தரவு பிறப்பித்ததிலிருந்தே, அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்க பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
  36 ராணுவ விமானங்களை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன. ஒரு விமானத்தின் விலை ரூ.600 கோடியாக இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு தற்போது ஒரு விமானத்துக்கு ரூ.1,600 கோடி கொடுக்கிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.36,000 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது.
  இது ஒரு புறம் இருக்க, மத்தியில் ஆளும் பாஜக அரசு, தில்லி அரசுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளை அளித்து வருகிறது. 
  தில்லி காவல் துறையின் மூலமும், சிபிஐ அமைப்பின் மூலம் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
  சோதனை என்ற பெயரில் தில்லி அரசின் 400 கோப்புகளை மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளது. ஆனால், இதுபோன்ற அதிரடி சோதனைகள், விசாரணைகளைக் கண்டு நான் கவலைப்படவில்லை. காரணம், நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. நான் அரசின் பணத்தில் ஒரு பைசாவைக் கூட எடுத்ததில்லை என்றார் கேஜரிவால்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai