சுடச்சுட

  

  தில்லியில் காற்றின் வேகம் மேலும் குறைந்ததன் காரணமாக சனிக்கிழமை காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது. தலைநகரில் தீபாவளிக்கு பிறகு காற்று மாசு ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இரு வாரங்களாக காற்றின் தரம் கடுமை மற்றும் மிகவும் மோசம் ஆகிய பிரிவுகளுக்கு இடையே மாறி, மாறி நிலைகொண்டு இருந்தது. இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி, சனிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 410 புள்ளிகளாக இருந்தது. இது கடுமையான பிரிவின் கீழ் வருகிறது.
  ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 100 முதல் 200 வரை இருந்தால் மிதமான' பிரிவிலும் 201 -300 மோசம்' , 301 - 400 வரை மிகவும் மோசம்', 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
  தில்லியில் 22 இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும், 13 இடங்களில் மிகவும் மோசம் எனும் பிரிவிலும் இருந்ததாக சிபிசிபி தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள காஜியாபாத், ஃபரீதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகியவற்றிலும் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்தது. மேலும், பி.எம். 2.5 நுண்துகள்கள் 287 என்ற அளவிலும், பி.எம். 10 நுண்துகள் 443 என்ற அளவிலும் பதிவாகி இருந்ததாக சிபிசிபி புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  மத்திய அரசின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவன் (சஃபர்) வெளியிட்டுள்ள தகவலில், அடுத்து வரும் இரண்டு நாள்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதால், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்த வாரத்தில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்களிலும் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால், காற்றில் மாசுபடுத்திகள் வெளியேறின. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் எனும் பிரிவுக்கு வந்தது. ஆனால், சனிக்கிழமை மீண்டும் கடுமையான பிரிவுக்கு வந்துள்ளது.
  11 ரயில்கள் தாமதம்: தில்லி உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், தில்லிக்கு வர வேண்டிய 11 ரயில்கள் சனிக்கிழமை தாமதமாக வந்ததாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
  தில்லியில் சனிக்கிழமை காலை முதல் குளிர் காற்றும் வீசி வந்தது. இந்நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியது. இதேபோல பாலம், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே பருவ சராசரியைவிட 2 டிகிரி உயர்ந்து 8.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.அதிகபட்ச வெப்பநிலை சஃப்தர்ஜங்கில் பருவ சராசரியைவிட 3 டிகிரி உயர்ந்து 22.9 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 23.2 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 22.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
  காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு சஃப்தர்ஜங்கில் 100 சதவீதம், பாலத்தில் 97 சதவீதம், ஆயாநகரில் 89 சதவீதமாக இருந்தது. மாலை 5.30 மணியளவில் சஃப்தர்ஜங்கில் 64 சதவீதம், பாலத்தில் 65 சதவீதம், ஆயாநகரில் 50 சதவீதம் என பதிவாகியிருந்தது. மேலும், காலை 7.30 மணியளவில் காண்பு திறன் பாலத்தில் 400 மீட்டராகவும், சஃப்தர்ஜங்கில் 300 மீட்டராகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  இதற்கிடையே, தில்லி, என்சிஆர், ஹரியாணா, ராஜஸ்தான், மேற்கு உத்தர பிரதேசம், சண்டீகர், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் தொடர்ந்து குளிர் காற்று வீசி வருகிறது. பனிமூட்டமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை தில்லிக்கு வர வேண்டிய 11 ரயில்கள் தாமதமாக வந்ததாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai