ரூ.32 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: வெளிநாட்டினர் இருவர் கைது

தில்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவரை தில்லி போலீஸார் அதிரடியாகக் கைது

தில்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவரை தில்லி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.32 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இருவரும் ஐவரிகோஸ்ட், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பாக தில்லி காவல்துறை உயர் அதிகாரி கூறியதாவது: 
ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப் பொருளைக் கடத்தி தில்லியில் விநியோகிக்கும் சர்வதேச போதைப் பொருள் கும்பலைக் கண்டறிய கடந்த ஓராண்டாக தில்லி காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்த கும்பலைச் சேர்ந்த பலரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 200 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், ஆப்கானிஸ்தான், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் தில்லியில் இருந்து இயங்கி வருவது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர் ஈஷ்வர் சிங்குக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, தில்லி ஹெளஸ் ரானி பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அசதுல்லா (27) கைது செய்யப்பட்டார். அதேபோன்று, தில்லி நிகால் விஹார் பகுதியில் ஐவரிகோஸ்ட் நாட்டைச் சேர்ந்த மௌஷாசி (30) கைது செய்யப்பட்டார்.
இவர்களிடமிருந்து 8 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தைப் மதிப்பு ரூ. 32 கோடி என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com