கடும் பனிப்பொழிவு: வரத்து குறைவால் வாழை இலை விலை உயர்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக, வரத்து குறைந்ததால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக, வரத்து குறைந்ததால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
பல்லடம் பகுதிக்கு கோவை, தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளிலிருந்து வாழை இலைகள் கொண்டு வரப்படுகின்றன. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு இலை வரத்து குறைந்து வாழை இலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மார்கழி துவக்கம் முதல் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வாழை மரத்தில் இருந்து இலை துளிர்விட்டு வளர்வது குறைந்துள்ளது. இதனால், இலை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 100 இலை கொண்ட ஒரு கட்டு இலை ரூ.500க்கு விற்றது தற்போது ரூ.1500க்கு விற்பனையாகிறது. அதே போல், சில்லறை விற்பனையில் ஒரு தலைவாழை இலை ரூ.6க்கும், சிற்றுண்டி இலை ரூ. 3க்கும், கட்டிங் இலை ரூ.1.50க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. வாழை இலை விலை உயர்வால் பல்லடத்தில் உள்ள பல ஹோட்டல்களில் பார்சல் சாப்பாடு, சிற்றுண்டிக்கு வாழை இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் ஷீட்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது பிளாஸ்டிக் ஷீட் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளதால் உணவு விற்பனை விலையை சற்று உயர்த்தியுள்ளனர்.
கோயில் விழாக்களில் இலை போட்டு அன்னதானம் வழங்குவது குறைந்துள்ளது. தற்போது பாக்குமட்டை தட்டுகளில் அன்னதானம் வழங்குவது அதிகரித்து வருகிறது. தற்போது வாழை இலைக்கு நல்ல விலை நிலவுகிறது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் வாழை இலை மரங்கள் கஜா புயலால் அடியோடு சாய்ந்து நாசம் அடைந்து விட்டன. அதனால் அந்த மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய வாழை இலை வரத்து இல்லை. பனிப்பொழிவால் வாழை இலை உற்பத்தியும் குறைந்து விட்டது என்று வாழை இலை வியாபாரி குளித்தலை சிங்காரம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com