குழந்தை சாவு: கட்டட ஒப்பந்ததாரர், மகன் கைது

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் 3 அடுக்குமாடி குடியிருப்பு சீரமைப்புப் பணியின் போது இடிந்து

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் 3 அடுக்குமாடி குடியிருப்பு சீரமைப்புப் பணியின் போது இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டட ஒப்பந்ததாரரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: 
நொய்டா செக்டார் 31-இல் உள்ள நிதாரி கிராமத்தில் மூன்று மாடிக் கட்டடத்தைக் கொண்டுள்ள அந்தக் குடியிருப்பில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. அப்போது, கட்டடத்தை இடித்து அகற்றும் போது, இடிபாடுகள் சாலையில் விழுந்தன. இதில் சாலையில் இருந்த லூவா (10) என்ற குழந்தை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும், ஷகீல் (12), பார்கா சர்மா (17), சொனாலி யாதவ் (18) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதற்கு கட்டடத்தை இடிக்கும் போது கவனக்குறைவாக இருந்ததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லூவாவின் உறவினர் அளித்த புகாரின் பேரில், நொய்டா செக்டார்-20 காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. லூவாவின் உறவினர் மேற்குவங்கத்தில் உல்ள டார்ஜிலிங்கில் இருந்து வந்து இங்கு குடியேறியவர். இந்தக் கட்டட சீரமைப்புப் பணியின் போது வீட்டின் உரிமையாளர் விஜேந்தர் அவானா, கட்டட ஒப்பந்ததாரர் மொய்னுதீன் (எ) மினு (59), அவரது மகன் சோனு (26) ஆகியோர் கவனக் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, மொய்னுதீன், அவரது மகன் சோனு ஆகியோர் நிதாரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். தலைமறைவாகியுள்ள வீட்டு உரிமையாளர் விஜேந்தர் அவானாவை தேடிக் கண்டுப்பிடிக்கும் பணியில் போலீஸ் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com