தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தலைவரானார் சக்தி சிங்

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வந்த சக்தி சிங்,

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வந்த சக்தி சிங், பதவி உயர்வு அடிப்படையில் சங்கத்தின் தலைவராக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. லிண்டோ குழுவின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அலுவலகத் தகலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பான விவகாரத்தில், உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 18-இல் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் , தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் குழு (2018-19), தற்போது சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வரும் சக்தி சிங், பதவி உயர்வு அடிப்படையில் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கூறுகையில், "ஏபிவிபியைச் சேர்ந்த சக்தி சிங் கடந்த மாதமே தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்' என்று தெரிவித்துள்ளது. 
பின்னணி: தில்லி மாணவர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சார்பில் போட்டியிட்ட அங்கிவ் பசோயா தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றிபெற்றார். அதே அமைப்பைச் சேர்ந்த சக்தி சிங், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றார். 
இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அங்கிவ் பசோயா, முதுகலைப் படிப்பு மாணவர் சேர்க்கையின் போது போலி மதிப்பெண் சான்றிதழ் (இளங்கலை) அளித்து சேர்ந்ததாகப் புகார் எழுந்தது. இதைக் காரணமாகக் கூறி, அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐயின் தலைவர் சன்னி சில்லர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
இதற்கிடையே, முதுகலைப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது அங்கிவ் பசோயா, பல்கலை.யில்அளித்துள்ள மதிப்பெண் சான்றிதழ் போலியானது என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உறுதி செய்தது. இந்த விவகாரத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் , அவரது மாணவர் சேர்க்கையை தில்லி பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி ரத்து செய்தது. 
மேலும், ஏபிவிபி அமைப்பிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அங்கிவ் பசோயாவுக்கு எதிராக தில்லி போலீஸும் வழக்குப் பதிவு செய்தது.
தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பான லிண்டோ கமிட்டியின் வழிகாட்டுதலின்படி சங்கத்தின் முக்கிய நிர்வாகி பதவி காலியாக இருக்கும் பட்சத்தில், அந்தப் பதவிக்கு இரண்டு மாதங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும். 
இல்லாவிட்டால், துணைத் தலைவராக இருப்பவர், தலைவராக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், துணைத் தலைவராக இருந்த சக்தி சிங், தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஏபிவிபி தெரிவித்துள்ளது. தற்போது அவர் பதவி உயர்வின் அடிப்படையில் சங்கத்தின் தலைவராகியுள்ளார் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜனநாயக விரோதமானது - என்எஸ்யுஐ
காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது போன்று அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றை மத்தியில் ஆளும் பாஜக கைப்பற்றுகிறது. இச்சூழலில் அந்த நிறுவனங்களுக்கு செல்லக் கூடாது என மக்கள் வெளியேறுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர். இது ஜனநாயக விரோதமானது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததாகவும் அமையாது. இதற்கு ஒரே வழி, இதுபோன்ற சக்திகளை வெளியேற்றுவதுதான்' என்று தெரிவித்துள்ளது.

பல்கலை. வேண்டுமென்றே காலம் கடத்தியது-ஏஐஎஸ்ஏ
இந்த அறிவிப்புக்கு இடதுசாரி அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்பு தலைவராக இருந்த அங்கிவ் பசோயாவின் மதிப்பெண்களை சரிபார்ப்பதில் பல்கலைக்கழகம் வேண்டுமென்றே காலம் கடத்தியுள்ளது. இதனால்தான் அந்தப் பதவி தற்போது சக்தி சிங்கிற்கு சென்றுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

"தாமதமான முடிவு'
புதிய தலைவர் சக்தி சிங் கூறுகையில், "இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டிருந்ததால், மாணவர் சங்கத்தின் செயல்பாட்டுக்குத் தடையாக இருந்துள்ளது. இருப்பினும், இந்தக் குறுகிய காலத்தை உகந்த வகையில் பயன்படுத்தி சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவ முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com