தில்லி சட்டத் துறை செயலருக்கு அமைச்சர் கைலாஷ் நோட்டீஸ்: ஜேஎன்யு மாணவர்கள் மீதான தேச துரோக வழக்கு விவகாரம்
By DIN | Published On : 24th January 2019 11:50 PM | Last Updated : 24th January 2019 11:50 PM | அ+அ அ- |

தில்லி சட்டத் துறை முதன்மைச் செயலர் மென்டிரேட்டாக்கு அத்துறையின் அமைச்சர் கைலாஷ் கெலாட் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தேச துரோக வழக்கில், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கோரிய கோப்பை, தில்லி சட்ட அமைச்சரின் பார்வைக்கு கொண்டு வராமல் அத்துறைச் செயலரே கருத்து தெரிவித்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதற்காக விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாள் கூட்டம் 2016, பிப்ரவரி மாதம் ஜேஎன்யுவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேச துரோக கோஷங்கள் எழுப்பியதாக அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட 10 பேர் மீது தில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
இதுதொடர்பாக கடந்த 14ஆம் தேதி தில்லி போலீஸ், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், "ஜேஎன்யு வளாகத்தில், கன்னையா குமார் உள்ளிட்ட 10 பேரும் தேச துரோக கோஷங்களை எழுப்பினர்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு தில்லி அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று தில்லி போலீஸôர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் தில்லி சட்டத் துறையின் ஒப்புதல் தேவை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லி போலீஸôர் ஒப்புதல் கோரிய கோப்பை, தில்லி அரசின் உள்துறை அமைச்சத்திடம் ஒப்படைத்தனர். அதன் மீது கருத்து தெரிவிக்கக் கோரி தில்லி சட்ட அமைச்சகத்துக்கு இந்தக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோப்பின் மீது தில்லி சட்ட அமைச்சகத்தின் முதன்மைச் செயலர் மென்டிரேட்டா தனது கருத்தை பதிவு செய்து கடந்த 18ஆம் தேதி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த கோப்பு தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் உள்ளது என்றும் அவர்தான் இந்தக் கோப்பு மீது இறுதி முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்தக் கோப்பு மீண்டும் சட்ட அமைச்சர் கெலாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.
தில்லி சட்ட அமைச்சரின் பார்வைக்கு கொண்டு வராமல், செயலர் மென்டிரேட்டா தனது கருத்தைப் பதிவு செய்து கோப்பை திருப்பி அனுப்பிய விவகாரம் தில்லி அரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் தலையிடுவதாக ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி வரும்நிலையில், இந்த விவகாரம் மோதல் போக்கை மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசுதான் தேச துரோகம் செய்கிறது
தில்லி அரசு தனது பணிகளைச் செய்ய விடாமல் மத்திய அரசுதான் தேச துரோகம் செய்து வருகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரையில், "கன்னையா குமார் தேச துரோகம் செய்தாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. தில்லி சட்ட அமைச்சகம் இதை ஆய்வு செய்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தில்லி அரசின் பள்ளி மற்றும் மருத்துவமனை வளர்ச்சி பணிகளுக்கு தடை விதித்தல், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கும், மொஹல்லா கிளினிக்குள் அமைத்தல் திட்டத்துக்கும் தடைகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செய்து வருகிறது. இது தேச துரோகமில்லையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெரிந்தே செய்துள்ளார்
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தேச துரோக வழக்கில், என்னுடைய கருத்துகள் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே, என்னிடம் கோப்பை காண்பிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று தில்லி சட்ட அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டத் துறை முதன்மைச் செயலர் இதை தெரிந்தே இதனை செய்துள்ளார் என்றும் கெலாட் குற்றம்சாட்டினார்.