கல்வித் தரத்தை அழிக்க மத்திய அரசு முயற்சி: முதல்வர் கேஜரிவால் குற்றச்சாட்டு
By DIN | Published On : 28th January 2019 11:51 PM | Last Updated : 28th January 2019 11:51 PM | அ+அ அ- |

தில்லியில் கல்வியின் தரத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். தில்லியில் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் பணிகளில் ஆம் ஆத்மி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தில்லி அரசுப் பள்ளிகளில் புதிதாக 11,000 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஃபிரண்ட்ஸ் காலனியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
இந்தியாவின் வரலாற்றிலும், தில்லி வரலாற்றிலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு புதிதாக 11,000 நவீன வகுப்பறைகளை கட்டும் முயற்சியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.
இதுபோல மாபெரும் வகுப்பறைகள் கட்டும் கட்டுமான நிகழ்வு இதற்கு முன்பு இந்தியாவில் எங்கும் நடைபெறவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் 8,000 புதிய வகுப்பறைகளைக் கட்டியுள்ளோம். ஆனால், தில்லியில் கல்வியின் தரத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தில்லி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது என்றார் அவர். இந்நிலையில், பிரதமர் மோடி பக்தர்கள் குறித்து, கேஜரிவால் தனது சுட்டுரையில் செய்துள்ள பதிவு, மோடி பக்தர்களால் நாட்டுப் பற்றாளர்களாக இருக்க முடியாது.
நாட்டுப் பற்றாளர்களால் மோடி பக்தர்களாக இருக்க முடியாது. நீங்கள் மோடி பக்தரா? அல்லது நாட்டுப்பற்றாளரா?என்பதைத் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 12 ஆயிரம் புதிய வகுப்பறைகள்
இந்த நிகழ்வில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பங்கேற்று பேசுகையில், தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 8,000 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 12,000 புதிய வகுப்பறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டப்படும். இதில், 11,000 புதிய வகுப்பறைகளைக் கட்டும் ஆரம்பப் பணிகள் தொடங்கியுள்ளன. 1,000 வகுப்பறைகள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தில்லியில் 17,000 பழைய வகுப்பறைகள்தான் இருந்தன. தற்போது, அரசுப் பள்ளிகளில் 25,000 நவீன வகுப்பறைகள் உள்ளன. 11,000 புதிய வகுப்பறைகளைக் கட்டுவதென்பது, புதிய 1,000 பள்ளிகளை அமைப்பதற்கு சமமாகும். இதன் மூலம் மாணவர்களின் கல்வியில் தில்லி அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.