ஜெ.பி. நட்டாவுக்கு சிசோடியா சவால்: அரசுப் பள்ளிகளை ஒப்பிட தயாரா?
By DIN | Published On : 01st July 2019 01:40 AM | Last Updated : 01st July 2019 01:40 AM | அ+அ அ- |

தில்லி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுடன் பாஜக ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஒப்பிட முடியுமா? என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி கேலிக்கூத்தாக மாறி வருகிறது என்று விமர்சித்திருந்த ஜெ.பி. நட்டாவுக்கு பதிலடியாக இந்த கேள்வியை சிசோடியா முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியை கேலிக்குரியது என பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார். இது தில்லி மக்களின் தீர்ப்பை விமர்சித்துள்ளதாகவே கருதப்படும். பிரதமராக இரண்டாவது முறையாக தேர்வாகியதும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி மக்களின் தீர்ப்பை கேலிக்குரியதாக்குபவர்கள், மக்களைக் கேலிக்குரியதாக்குகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இப்போது பாஜக செயல் தலைவர் தில்லி மக்களின் தீர்ப்பை கேலிக்குரியதாக்கியதன் மூலம் தில்லி மக்களை அவர் அவமதித்துள்ளார்.
தில்லி அரசுப் பள்ளிகளின் தரத்துடன் பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வித் தரத்தை ஒப்பிட்டு விவாதிக்க ஜெ.பி. நட்டா தயாரா? தில்லி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94 சதவீதம். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன? தில்லி பட்ஜெட்டில் கல்விக்காக 26 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது? தில்லி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுடன் பாஜக ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஒப்பிட முடியுமா?
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து தில்லி அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வியின் தரம் நன்றாக இருந்தால், அந்த மாநிலங்களில் இருந்து அவர்கள் ஏன் தில்லிக்கு வந்து கல்வி கற்க வேண்டும்? பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து 10 பள்ளிகளைத் தேர்ந்தெடுங்கள். தில்லியில் உள்ள 10 அரசுப் பள்ளிகளை நான் தேர்ந்தெடுக்கிறேன். அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா என ஜெ.பி. நட்டாவுக்கு சவால் விடுகிறேன் என்றார் சிசோடியா.