11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை

நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக, டிடிவி தினகரன் தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது புதன்கிழமை (ஜூலை 3) விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் சக்கரபாணி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, இந்த வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் வேறு வழக்கில் வாதாட உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையேற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 17-க்கும், பின்னர் ஜனவரி 31-க்கும் ஒத்திவைத்தனர். ஆனால், வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து, 11 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே. சிக்ரி மார்ச் 6-ஆம் தேதி ஓய்வு பெற்றார். 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, "இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்' என முறையிட்டார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு உரிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் 49-ஆவது வழக்காக விசாரணைக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com