பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: தனிநபர் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 05th July 2019 01:32 AM | Last Updated : 05th July 2019 01:32 AM | அ+அ அ- |

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனி நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் இழப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வியாழக்கிழமை வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை பூஜ்ய நேரத்தில் அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் முன்வைத்த கோரிக்கை:
விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏராளமான மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்திற்காக குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 70 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மானியத் திட்டம் மாநிலத்திற்கு மாநிலம் அங்குள்ள மண் வகை, தட்ப வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், பூ வகைகள் ஆகியவற்றுக்கு சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான செலவு அதிகமாவதால், மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும். அதேபோல, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தனி நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காத நிலை உள்ளது. எனவே, அவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில், திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றார் அவர்.
குழந்தைகளுக்கான திட்டம்: பூஜ்ய நேரத்தில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் முன்வைத்த கோரிக்கை: தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் தமிழகத்தில் 1986-இல் விருதுநகர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் இந்தியாவில் 271 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களிலும் நீட்டிக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. திட்டப் பணியாளர்களின் சேவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் பாராட்டப்பட்டது. தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சிறப்புப் பயிற்சி மையங்களில் 6,079 குழந்தைகள் பயில்கின்றன. இவர்களில் 4,132 குழந்தைகள் இந்த ஆண்டு பிரதான நீரோட்டத்தில் கலந்துள்ளன. இக்குழந்தைகளுக்கு நபர் ஒன்றுக்கு மாதம்தோறும் ரூ.400 உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த உதவித் தொகை 2016, டிசம்பரில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் பிரதானப் பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் நபருக்கு ரூ.8 ஆயிரம், கல்விப் பயிற்சியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் என குறைவான மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது. இந்த மதிப்பூதியத்தை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கான உதவித் தொகையை விடுவிக்கவும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உள்ளாட்சிக்கான செயல்பாட்டு நிதி: சிறப்பு கவன ஈர்ப்பு குறிப்பில் அதிமுக உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன் முன்வைத்த கோரிக்கை: 14-ஆவது நிதிக் குழு 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளுக்காக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே ரூ.365.37 கோடி மற்றும் 414.92 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே ரூ.194.78 கோடி மற்றும் ரூ.221.20 கோடியும் செயல்பாட்டு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அளிப்பதற்கான தினசரிப் பணிகளை மேம்படுத்துவதற்காக நிதி தேவைப்படுகிறது. ஆனால், இந்த நிதி இரு நிதி ஆண்டுகளாக விடுவிக்கப்படவில்லை. அதேபோன்று இரண்டாவது தவணை அடிப்படை நிதியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டியுள்ளது . இதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.