7 பேர் விடுதலை: தமிழக ஆளுநரை மத்திய அரசு அறிவுறுத்த மக்களவையில் திருமாவளவன் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைச் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 2019- 2020 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: 
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில்  தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து 10 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தமிழக ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை.இது மத்திய அரசின் மீது அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய அரசு ஆளுநருக்கு உடனடியாகத் தகுந்த அறிவுறுத்தல் அளிக்க வேண்டும்.
மத்திய நிதிநிலை அறிக்கையானது அலங்கார சொற்களால் பின்னப்பட்ட கவர்ச்சி நிறைந்த அறிவிப்புகளைக் கொண்டதாக இருக்கிறதே தவிர, பாராட்டும்படியாக இல்லை என்பது கவலை தரக் கூடியது. வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகிய எதுவும் இல்லாத பட்ஜெட். விவசாயத்தை நம்பியுள்ள இந்த தேசத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான எந்த திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோர்களின் மேம்பாட்டுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மோடி தலைமையிலான அரசு, "சப்கா விஸ்வாஸ்' என்ற புதிய முழக்கத்தை முன்வைத்திருக்கிறது. அனைவரது நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதுதான் இந்த முழக்கத்தின் நோக்கம். ஆனால், பட்ஜெட் அறிக்கை யில் அந்த நம்பிக்கையைப் பெறுவதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை என்பது கவலை தருகிறது.
"அனைவருக்கும் வீடு என்பது கனவு' என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. 2018-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.18,516 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிகழ் நிதியாண்டில் ரூ.16,116 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்காக கடந்த நிதியாண்டில் ரூ.61,084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய நிதியாண்டில் ரூ.1,084 கோடி குறைத்து ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
 "ஒரே தேசம் ஒரே கலாசாரம்' என்று முழங்கும் இந்த அரசு, "ஒரே தேசம் ஒரே கிராமம்' எனும் முழக்கத்தை ஏன் முன்வைக்கக் கூடாது? இத்தேசத்தில் ஒவ்வொரு கிராமமும் இரண்டு கிராமங்களாக உள்ளன. ஊர் மக்கள் ஒரு கிராமமாகவும், தலித் மக்கள் இன்னொரு கிராமமாகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஊர் மக்களுக்கு ஒரு சுடுகாடு, தலித் மக்களுக்கு இன்னொரு சுடுகாடு என்ற இரட்டைச் சுடுகாடு என்ற நிலை உள்ளது. எனவே, "ஒரே நாடு ஒரே சுடுகாடு' என்ற நிலையை உருவாக்க இந்த அரசு முன்வர வேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com