யமுனை நீர் சேமிப்புத் திட்டம்: குழுவின் அறிக்கைக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்

யமுனை நீர் சேமிப்புத் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையிலான குழுவின் அறிக்கைக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யமுனை நீர் சேமிப்புத் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையிலான குழுவின் அறிக்கைக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் தில்லியில் கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், யமுனை நீர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் யமுனை வெள்ளப்படுகையில் அமைந்துள்ள பல்லா மற்றும் வாஜீராபாத் ஆகியவற்றுக்கு இடையே அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மழைக் காலங்களில் யமுனையில் கரை கடந்து ஓடும் வெள்ள நீரை சேமிக்க சிறிய அளவிலான குளங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், யமுனை நீர் சேமிப்புத் திட்டம் தொடர்பாக துறைகளுக்கு இடையிலான குழு அறிக்கைக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தில்லி அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
தில்லி முதல்வரின் தொடர் கண்காணிப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய திட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பது சாத்தியமில்லை. இத்திட்டத்துக்கான தயாரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் தொடங்குமாறு தில்லி நீர்ப்பாசனம், வெள்ளக்கட்டுப்பாட்டுத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்துக்காக நிலத்தை குத்தகையாக வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 77 ஆயிரத்தை அரசு வழங்கும்.
 தில்லி அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்தர் சிங் ஷெகாவத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்து, திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தமைக்கும், இந்த முன்னோடி திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கிய மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குழுவின் ஒப்புதலைத் தவிர்த்து, கிட்டத்தட்ட அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளன என்றும், என்ஜிடியின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து, தில்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com