ஹரியாணா பேரவைத் தேர்தலில் தனித்து போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் முயற்சி மேற்கொண்டார். ஆனால், தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷீலா தீட்சித் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், சில தலைவர்கள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், இறுதியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் அறிவித்து தனியாகப் போட்டியிட்டது. இதேபோல, ஹரியாணா, பஞ்சாபிலும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கவில்லை. 
ஆனால், ஹரியாணா மாநிலத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் செளதாலாவின் பேரனான துஷ்யந்த் செளதலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் ஜனநாயக் ஜனதா கட்சியும் மற்ற 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டன. ஆனால், அனைத்துத் தொகுதிகளிலும் ஜனநாயக் ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் படுதோல்வியைச் சந்தித்தன. அதே சமயம் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதேபோல, தலைநகர் தில்லியிலும் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், வரும் ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், தனித்து போட்டியிடப் போவதாகவும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாநில தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஹரியாணா மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்தோம். இதைத் தொடர்ந்து, அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல், தனித்துப் போட்டியிடுவது என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது என்றார் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com