சுடச்சுட

  

  முதியவர்களை வழிப்பாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லும் தில்லி அரசின் திட்டம் தொடக்கம்

  By DIN  |   Published on : 13th July 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதியவர்களை வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லும் தில்லி அரசின் "முக்கிய மந்திரி தீர்த்த யோஜனா' திட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. 
  இதன் ஒருபகுதியாக தில்லியில் இருந்து அமிருதசரஸ் பொற்கோயில் சென்று அங்கிருந்து ஆனந்தப்பூர் சாகிப் செல்லும் குழுவை தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று வழியனுப்பி வைத்தார். 
   2018-ஆம் ஆண்டு, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வட இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கேஜரிவால் அறிவித்திருந்தார். 
  இதன்படி, மதுரா, பிருந்தாவன், ஆக்ரா, ஹரித்துவார், ரிஷிகேஷ், ஆஜ்மீர், புஷ்கர், அமிருதசரஸ், அனந்தப்பூர் சாகிப், வைஷ்ணவி தேவி உள்ளிட்ட முக்கியமான வழிபாட்டுத் தலங்களுக்கு முதியவர்கள் இலவசமாகச் செல்லலாம். 
  இந்நிலையில், தில்லியில் இருந்து அமிருதசரஸ் சென்று அங்கிருந்து அனந்தப்பூர் சாகிப் செல்லும் முதல் குழுவை தில்லி முதல்வர் வெள்ளிக்கிழமை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் இம்ரான் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  அப்போது கேஜரிவால் பேசியதாவது: தில்லியில் உள்ள முதியவர்களை புனிதப் பயணம் அழைத்துச் செல்ல வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு விரும்பினேன். 
  அது இப்போது நிறைவேறுவதில் பெரும் மகிழ்ச்சி. தில்லி அரசின் முக்கியத் திட்டங்களில் இது ஒன்றாகும். தில்லியில் உள்ள70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்தும் தலா 1,100 முதியவர்கள் இந்த யாத்திரைத் திட்டத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
  இந்த யாத்திரைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டோம். முதியவர்கள் ஏதாவது ஒரு புனிதப் பயணம் செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். முதியவர்களுக்கு குளிர்சாதன வசதியுடைய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மருத்துவ வசதிகள் உள்ளன. 
  பயணிகளுக்கு சுகாதாரமான உணவு இலவசமாக வழங்கப்படும். அடுத்த வாரம் வைஷ்ணவி மாதா கோயிலுக்கு செல்லவுள்ள முதியவர்கள் குழுவுடன் நானும், மணீஷ் சிசோடியாவும் பயணம் செய்யவுள்ளோம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai