1,000 அரசு பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு

தில்லி அரசின் 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர் - ஆசியர்கள் சந்திப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தில்லி அரசின் 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர் - ஆசியர்கள் சந்திப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வி கற்கும் திறன், செயல் நடவடிக்கை ஆகியவற்றைக் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.
முன்னதாக இந்த பெற்றோர் -ஆசிரியர்  சந்திப்பு கூட்டம் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. 
மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான பிரசாரம் மேற்கொள்வதற்காக ஆம் ஆத்மி இந்த சந்திப்பு கூட்டத்தைப் பயன்படுத்துகிறது என்று பாஜக குற்றம்சாட்டியதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெற்றோர் -ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தை தில்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி மர்லினா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்களிடம் மாணவர்களின் வருகை குறைபாடு குறித்தும் கல்வி கற்கும் திறன், செயல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத பெற்றோர்களின் பட்டியலைத் தயாரிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தில்லி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
குறைவான மதிப்பெண்கள், வருகைப் பதிவு உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்றால் அவர்களை வேறு ஒரு நாளில் அழைத்து கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி கல்வி இயக்ககம் தெரிவித்தது.
ரமேஷ் நகரில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவியின் தாய் சரலா கூறுகையில், "வெறும் கல்வியில் மட்டும் தில்லி அரசு கவனம் செலுத்தாமல், பெற்றோர், சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். எனது மகளின் அடிம்பிடிக்கும் குணம் சற்று குறைந்துள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.
மற்றொரு மாணவனின் தந்தை தபீஷ் முகமது கூறுகையில், "எனது மகன் முன்பு நன்றாக படிக்கவில்லை. அவனது கல்வி முடிவு குறித்து ஆண்டு இறுதியில்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பில் அவனது திறன் தெரிந்து கொண்டு மேலும் ஊக்கப்படுத்த உதவுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com