திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பட்டி இடையே அகலப் பாதைப் பணியை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பட்டி இடையே அகல ரயில் பாதைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பட்டி இடையே அகல ரயில் பாதைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். செல்வராஜ் வலியுறுத்தினார்.
மக்களவையில் வியாழக்கிழமை இரவு 2019-2020-ஆம் ஆண்டுக்கான ரயில்வே துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: 
வேளாங்கண்ணி முதல் திருத்துறைப்பூண்டி வரை புதிய ரயில் வழித்தடம் அமைக்க 2012-இல் உத்தேசிக்கப்பட்டது. 33 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோன்று, திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பட்டி வரையில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ரயில்வே அமைச்சகம் ஒதுக்க வேண்டும். 
திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் 72 கிராஸிங்குகள் வருகின்றன. கேட் கீப்பர் இல்லாததால், 140 கி.மீ. தொலைவு வழித்தடத்தை ரயில்கள் கடக்க குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆகிறது. அதனால், இந்த வழித்தடத்தில் உடனடியாக 72 கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். 
எர்ணாகுளம் விரைவு ரயில், மண்ணை விரைவு ரயில் ஆகியவை கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திருவாரூர் ரயில் நிலையத்தில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்தவும், திருத்துறைப்பூண்டியில் கணினி டிக்கெட் பதிவு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com