பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர் அம்பர் டிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஏப்ரலில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்றும், இது பொது இடங்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் கடந்த 2017-இல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தில்லி அரசுப் பள்ளிகளில் பொருத்தப்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைப் பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் உள்ளது. இதனால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். தில்லி அரசின் இத்திட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது. இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், பள்ளிகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


கேஜரிவால் வரவேற்பு
சிசிடிவி பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்தை உத்தரவை வரவேற்றுள்ள முதல்வர் கேஜரிவால், நன்றியும் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கும் பொறுப்பாளியாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தில்லி பள்ளிகளுக்கு சிசிடிவி கண்காணிப்புக் கேமரா அவசியமாகும். தில்லி அரசின் இத்திட்டத்துக்கு முட்டுக் கட்டை போடும் வகையில், ஆரம்பம் முதலே பல சக்திகள் மும்முரமாக இயங்கின. இந்நிலையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் தில்லி அரசின் திட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com