சுடச்சுட

  

  மெட்ரோ 4-ஆம் கட்டப் பணி : மத்திய அரசு ஒத்துழைக்க கேஜரிவால் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th July 2019 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


   தில்லி மெட்ரோ நான்காவது கட்டப் பணியை முடிப்பதில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
  மேலும், மூன்று வழிப்பாதைகளுக்கான திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
  ஆம் ஆத்மி அரசின் மூலம் முன்மொழியப்பட்ட ஆறு ரயில் வழித்தடங்களில் மூன்று வழித்தடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசுக்கும், கேஜரிவால் அரசுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திட்டப் பணிகளை தொடங்க முடியவில்லை. எனினும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி அளிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக, உச்சநீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
  இதைத் தொடர்ந்து,  திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு  உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
  இந்நிலையில், தில்லி முதல்வர் கேஜரிவால் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், பாக்கியுள்ள மூன்று வழிப்பாதைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். மக்கள் நான்காவது மெட்ரோ திட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும் என விரும்புகின்றனர். 
  பல ஆண்டுகளாக இந்தப் பணி தடைபட்டுள்ளது. யார் தவறால் பணி தடைபட்டது என்பது குறித்து குறை கூறாமல், அனைவரும் ஒருங்கிணைந்து பணியை விரைந்து முடிக்க முன்வரவேண்டும். இதுதான் பொதுமக்கள் நலனுக்கானதாகும்' என  தெரிவித்துள்ளார்.
  முன்னதாக,  தில்லி அரசால் முன்மொழியப்பட்ட வழித்தடங்களில் முகுந்த்பூர் - மௌஜ்பூர் (12.54 கிமீ),  ஜனக்புரி மேற்கு - ஆர்.கே. ஆஸ்ரம் (28.92 கிமீ ),  துக்ளகாபாத் -  ஏரோசிட்டி  (20.20 கிமீ) ஆகிய மூன்று வழித்தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.  ரித்தாலா - பவானா - நரேலா,  இந்தர்லோக் - இந்திரபிரஸ்தா,  லாஜ்பத் நகர் -சாக்கேட் ஜி பிளாக் ஆகிய வழித்தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்த ஆம் ஆத்மி அரசு , மத்திய அரசு காரணம் ஏதும் தெரிவிக்காமல் ஒருதலைப்பட்சமாக திட்டத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளது' என்று குற்றம்சாட்டியது.  
  இதனிடையே, காற்று மாசு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் அபராஜிதா சிங் ஆஜராகி,  நான்காவது கட்ட மெட்ரோ திட்டப் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்க தில்லி அரசு சம்மதித்துள்ளதாகத் தெரிவித்தார். 
  தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்த விவகாரத்தில் நிலத்திற்கான தொகையைப் பகிர்ந்து கொள்வது,  வரிகள் ஆகியவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai