சிசிடிவி காட்சிகளை பெற்றோர் மட்டுமே பார்க்க முடியும்: மணீஷ் சிசோடியா விளக்கம்

தில்லி அரசு பள்ளிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை பெற்றோர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 


தில்லி அரசு பள்ளிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை பெற்றோர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 
தில்லியில் உள்ள அரசு,  தனியார் பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் கேஜரிவால் அறிவித்திருந்தார். 
மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இது இடையூறாக இருக்கும் எனக் கூறி அத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே,  தில்லி அரசின் இத்திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. 
இந்நிலையில், இது தொடர்பாக மணீஷ் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகளின் சிசிடிவி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகும்  காட்சிகளை பெற்றோர்கள் மட்டுமே பார்வையிட முடியும். வேறு யாரும் பார்க்க முடியாது. பெற்றோர்கள் இக்காட்சிகளை தங்களது செல்லிடப் பேசியில் பார்வையிடலாம். இதற்காக தனித்துவமான கடவுச் சொல் (பாஸ்வேர்ட்)  உருவாக்கப்பட்டுள்ளது. 
பெற்றோர்கள் இந்த கடவுச் சொல் உதவியுடன் சிசிடிவி காட்சிகளைப் பார்க முடியும். குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே இந்தக் காட்சிகளைப் பெற்றோர்கள் பார்க்க முடியும். இக்காட்சிகளில் ஆடியோ இருக்காது.
பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவது தொடர்பாக பல முறை சிந்தித்தே இது தொடர்பாக அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகச் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளன.  
தில்லி அரசு கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தில்லி அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. தில்லி பள்ளியொன்றில் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 
இதைத் தொடர்ந்து, 2017,  செப்டெம்பரில் சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், தில்லி அரசின் இத்திட்டத்துக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதன் பின்னணி புரியவில்லை. இத்திட்டம் தொடர்பாக தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com