சென்னையின் பசுமைப் பரப்பு பாதிக்காமல் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
By DIN | Published On : 18th July 2019 12:17 AM | Last Updated : 18th July 2019 12:17 AM | அ+அ அ- |

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளைச் செயல்படுத்தும் போது உள்ளூர் மக்களின் நலன்களையும், சென்னையின் பசுமைப் பரப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வா.மைத்ரயேன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் முன்வைத்த கோரிக்கை:
முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2023 தொலைநோக்கு ஆவணத்தில் குறிப்பிட்டப்படி, சென்னையில் அதிவேக போக்குவரத்துத் திட்டத்தைத் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டினார். சென்னை மெட்ரோ தற்போது நாளொன்றுக்கு 1 லட்சம் பேருக்கு சேவை அளித்து வருகிறது. சென்னை மெட் ரோ இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.69,180 கோடி மதிப்பீட்டில் 119 கி.மீ. நீளத்துக்கு 128 ரயில் நிலையங்களுடன் செயல்பட 120.98 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். முதல் நிலையில், அரசு நிலத்தை மட்டுமே பயன்படுத்தப் போவதாகவும், தனியார் நிலம் மிகக் குறைந்த அளவுக்கே பயன்படுத்தப்படும் என்றும் இதனால் நிலத்தை இழந்து அவதிப்படுவோரின் எண்ணிக்கை குறையும் என்றும் அதிகாரிகள் உளப்பூர்வ முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், யதார்த்த நிலை வேறு மாதிரியாக உள்ளது. சுமார் 2,865 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளையும், கடைகளையும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக தாரை வார்க்க வேண்டிய நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட பலர் போராட்டங்களை நடத்தினர்.
லைட்ஹவுஸ் முதல் பூவிருந்தவல்லி வரை திட்டமிடப்பட்டுள்ள நான்காவது வழித்தடத்தில் டிடிகே சாலை, லஸ் சர்ச் சாலை, கச்சேரி சாலை ஆகியவற்றை விடுத்து மந்தைவெளி வரை அடையாறு கேட் முதல் சாந்தோம் வழியாக லைட் ஹவுஸுக்கு நேரடியாகக் கொண்டு செல்லும் வகையில் வழித்தடத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரியுள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளால் சென்னையின் பசுமைப் பரப்பு வெகுவாகப் பாதிக்கப்படும். 118.9 கி.மீ. நீள மூன்று வழிப் பாதைகளை அமைக்க 2,034 மரங்கள் வெட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நட சுமார் ரூ.3.80 கோடிக்கும் அதிகமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செலவு செய்யக்கூடும். எனவே, உள்ளூர் மக்கள் இடம் பெயர்வதைத் தவிர்த்து அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தும் வகையிலும், சென்னையின் பசுமை பரப்புக்கு ஏற்படும் பாதிப்புக்களை பெருமளவு குறைக்கும் நோக்கிலும் மாற்று வழிகளை ஆராய்ந்து சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளைச் செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.