Enable Javscript for better performance
தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிரான 2 ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிரான 2 ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 25th July 2019 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி சட்டப்பேரவைத் தலைவர் தங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு அதிருப்தி எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷேராவத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
    மேலும், தகுதி நீக்க புகாரை முதலில் விசாரித்து பின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்றும் இந்த விவகாரத்தில் அனைத்துவிதமான நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயலுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
    இது தொடர்பான மனுக்களை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் படேல், நீதிபதி சி. ஹரி சங்கர்ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
    தகுதி நீக்கம் தொடர்புடைய மனுக்கள் மீது முடிவு எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. ஆகையால், இந்த விவகாரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பியுள்ள முதல்கட்ட எதிர்ப்பையோ அல்லது தகுதி நீக்க மனுவையோ அல்லது இரண்டையும் ஒன்று சேர்த்தோ சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்கலாம். 
    இதில், சட்டப்பேரவைத் தலைவர் முதலில் இந்த விவகாரத்தில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற இயலாது. இந்த விவகாரத்தில் எந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது பேரவைத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். இந்த வழக்கில் முன்பு ஒரு நபர் அமர்வு அளித்த தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு அவரே தீர்ப்பு அளித்துள்ளார். ஆகையால், இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    முன்னதாக, பாஜகவில் சேர்ந்த காரணத்தால் எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷேராவத் ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ் மனு அளித்தார். 
    இதுகுறித்து ஜூலை 8ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று இரண்டு எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். 
    கட்சி சார்பற்று நடந்து கொள்ள வேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல், ஆம் ஆத்மி கட்சியின் விழாவில் கலந்து கொண்டுள்ளார். 
    ஆகையால், தங்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் என்றும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் அல்லது குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இரண்டு எம்எல்ஏக்களும் வழக்கு தொடுத்தனர்.
    அவர்களின் மனுக்களை ஒரு நபர் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, இரு நபர் நீதிபதி அமர்வில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுக்களையும் தற்போது தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai