மைக் கருவியில் புகை: மாநிலங்களவை அலுவல் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் திங்கள்கிழமை காலை அவை கூடிய சில நிமிடங்களில் உறுப்பினர்கள் இருக்கைப் பகுதியில்

மாநிலங்களவையில் திங்கள்கிழமை காலை அவை கூடிய சில நிமிடங்களில் உறுப்பினர்கள் இருக்கைப் பகுதியில் உள்ள மைக் கருவியிலிருந்து (கட்டுப்பாட்டு கருவியில்) திடீரென புகை கிளம்பியதால் அலுவல் நடவடிக்கைகள் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை திங்கள்கிழமை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியதும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ். ஜெயபால் ரெட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக உறுப்பினர் கே.ஜே . அல்போன்ஸ் அவைத் தலைவர் கவனத்திற்கு ஒரு புகாரைக் கொண்டு வந்தார். அதாவது, தான் அமர்ந்திருந்த நான்காவது வரிசை இருக்கையில் இருந்த மைக் கட்டுப்பாட்டு கருவியில் இருந்து புகை வெளியேறுவதாக அவர் தெரிவித்தார். மேலும், புகை எழும்பியதால் பாஜகவின் மற்றொரு உறுப்பினர் பர்ஷோத்தம் கோதபாய் ருபாலா தனது இருக்கையில் இருந்து எழுந்து, வேறு இருக்கையில் அமர்ந்தார். இதை தொடர்ந்து, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், "இந்தப் பிரச்னையை பணியாளர்கள் சரி செய்வார்கள்' என்றார். இது மின்கசிவு காரணமாக இருக்கும் என்று உறுப்பினர்கள் தெரிவித்த போது, அவை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அந்தப் பிரச்னையை ஆராய்ந்து தீர்த்துவைக்குமாறு ஊழியர்களை அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com