வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடி: 2 பேர் கைது

என்டிஎம்சியில் வேலை வாங்கித் தருவதாக ராஜஸ்தானைச் சேர்ந்த பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில் 2  பேரை தில்லி காவல் துறையின


என்டிஎம்சியில் வேலை வாங்கித் தருவதாக ராஜஸ்தானைச் சேர்ந்த பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில் 2  பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். இருவரும் ஆல்வார், ரேவரி பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுதில்லி காவல் துணைஆணையர் மதுர் வர்மா கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார் யாதவ்.  இவர் ஓர் ஆண்டுக்கு முன்பு வேலையின்றி இருந்தார். அப்போது, அவருக்கு மணீஷ் பாண்டே என்பவர் கால் சென்டரில் வேலை வாங்கித் தந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு தனது பங்குதாரராக சுனில் குமார் யாதவை மணீஷ் பாண்டே சேர்த்துக் கொண்டார். அதன்பிறகு, அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் பணம் பெற்று இருவரும் ஏமாற்றத் தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு ஓம் பிரகாஷ் மீனா என்பவருடன் யாதவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,  தில்லி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பொறியாளர்களைக் குறிவைத்து இந்த மூவர் கும்பல் அரசு வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தனர். இதையடுத்து, தில்லி கனாட் பிளேஸில் அலுவலகம் அமைத்து அப்பாவி இளைஞர்களிடம் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தலா ரூ. 8 லட்சம் பெற்றனர். பின்னர், தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக பிடெக் பொறியாளர் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார்.
அதில்,  தன்னுடைய சொந்த ஊரான ஆல்வாரில் மார்ச் மாதத்தில் சந்தீப் என்பவரை சந்தித்ததாகவும்,  அப்போது சந்தீப் புகார்தாரருக்கும், அவரது நண்பரின் சகோதரருக்கும் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, முதல் தவணையாக ரூ.4 லட்சம் பணம் தருமாறு இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதையடுத்து, பணம் தரப்பட்டது. சில நாள்களுக்குப் பிறகு இரண்டாவது தவணையாக ரூ.3 லட்சம் தரப்பட்டது. இதன் பிறகு,  அஞ்சலில் என்டிஎம்சியில் வேலை செய்வதற்கான நியமனக் கடிதம் புகார்தாரருக்கு வந்தது. அந்தக் கடிதம் குறித்து  விசாரித்தபோது, அந்த நியமனக் கடிதம் போலி எனத் தெரிய வந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சுனில் குமார் யாதவ், பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகிவிட்ட மணீஷ் பாண்டேவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com