தலைநகரில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஷீலா தீட்சித் வலியுறுத்தல்
By DIN | Published On : 09th June 2019 12:07 AM | Last Updated : 09th June 2019 12:07 AM | அ+அ அ- |

தலைநகர் தில்லியில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: நிரந்தர மின் கட்டணம் அறிமுகத்துக்கு முன்பு வரை மின் கட்டணம் சாதாரண அளவிலேயே இருந்தது. ஆனால், நிரந்தர கட்டணம் என்ற பெயரில் தில்லி அரசு கோடிக்கான ரூபாயை மக்களிடம் வசூலித்து மின் விநியோக நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. குறிப்பாக, குடிசைப் பகுதிகள், அங்கீகாரமற்ற காலனிகள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான மின் அளவை மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மின் அளவை மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு, மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் கட்டணத்தை குறைப்பதற்கு தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிஇஆர்சி) வலியுறுத்தப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறி வருகிறார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துதான் அவர் இதைத் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ. 7,401 கோடி அளவுக்கு நுகர்வோர்களிடம் இருந்து டிஇஆர்சி வசூலித்துள்ளது. கடந்த 2018, ஏப்ரல் 1 முதல் நிகழான்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நிரந்தரக் கட்டணம் என்ற பெயரில் பிஆர்பிஎல் மின் விநியோக நிறுவனம், ரூ. 1,139 கோடி, டிபிடிடிஎல் மின் விநியோக நிறுவனம் ரூ. 1,474 கோடியும் வசூலித்துள்ளன. இதே விகிதாசாரத்தில் மின் கட்டணத்தை கணக்கிட்டால், 2019 ஜூலை வரை ரூ. 1,569 கோடி வரை வசூலிக்கப்படும். அப்போது நிரந்தரக் கட்டணம் என்ற பெயரில் மொத்தம் ரூ. 6,278 கோடி வசூலிக்கப்படும்.
ஏழைகள் நலனுக்காக ஆட்சி நடத்த வந்ததாகத் தெரிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சி, இதன் மூலம் யாருக்கு ஆட்சி நடத்தி வருகிறது என்பது தெளிவாகிறது. அக்கட்சி, தில்லி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. எனவே, தலைநகர் தில்லியில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காங்கிரஸ் குழு சந்திக்கும். இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார் ஷீலா தீட்சித்.
இந்தப் பேட்டியின் போது, கட்சியின் செயல் தலைவர்கள் ஹாரூண் யூசுஃப், ராஜேஷ் லிலோத்தியா, தில்லி முன்னாள் அமைச்சர் மங்கத் ராம் சிங்கல், ரமாகாந்த் கோஸ்வாமி, கிரண் வாலியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.