நாட்டில் நிலவும் வறட்சியை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
By DIN | Published On : 09th June 2019 12:07 AM | Last Updated : 09th June 2019 12:07 AM | அ+அ அ- |

நாட்டில் நிலவும் வறட்சியை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. ஸ்கைமேட் நிறுவனத் தகவலின்படி, தற்போது நிலவும் வறட்சி, பருவ மழைக்கு முந்தைய கடந்த 65 ஆண்டுகளில் 2-ஆவது முறையாகும். கடந்த 2012-இல் 31 சதவீதம் மழை பற்றாக்குறை இருந்தது. நிகழாண்டு பருவமழை பற்றாக்குறை 25 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
நாட்டின் 40 சதவீதம் மக்கள், அதாவது 50 கோடிக்கும் மேலானவர்கள் இந்த வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கர்நாடகம், பிகார், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள அணைகளில் உள்ள நீரின் அளவும் குறைந்து வருகிறது. இதனால், மத்திய அரசு வறட்சி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குடிநீர் பற்றாக்குறை, கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் அதிக அளவில் புலம் பெயர்வு நடைபெறுகிறது. பட்டினிச் சாவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளிக்க மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. தற்போது நிலவும் வறட்சி நிலையை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.
வறட்சி கால நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளி கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.