முன்னாள் தலைமை நீதிபதி லோதாவிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது
By DIN | Published On : 12th June 2019 07:03 AM | Last Updated : 12th June 2019 07:03 AM | அ+அ அ- |

உச்சநீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி பி.பி. சிங்கின் இ-மெயிலை முடக்கி, அதன் மூலம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதாவிடம் ரூ. 1 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த தினேஷ் மாலி என்ற இளைஞரை தில்லி போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கைது செய்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட முகேஷ் என்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தில்லி காவல் துறையில் மே 30ஆம் தேதி நீதிபதி ஆர்.எம். லோதா புகார் அளித்திருந்தார். அதில், "உச்சநீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதியும், தனது நண்பருமான பி.பி. சிங்கின் இ-மெயில் முகவரியில் இருந்து "அவசரமாக உதவி தேவைப்படுகிறது' என்று இ-மெயில் வந்தது. அப்போது அவரைத் தொடர்பு கொள்ள முற்பட்டும் முடியவில்லை. பின்னர் இ-மெயில் மூலமே அவரிடம் பதில் கேட்டபோது, "தனது உறவினருக்கு அவசர அறுவைச் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மருத்துவர் தினேஷ் பாலி என்பவரது வங்கிக் கணக்குக்கு ரூ. 1 லட்சம் அல்லது ரூ. 95 ஆயிரம் செலுத்துமாறும் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நானும் ரூ. 50 ஆயிரமாக இரு முறை பணப் பரிமாற்றம் செய்தேன். அதன்பின்னர்தான் நீதிபதி பி.பி. சிங்கின் இ-மெயில் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பணப் பரிமாற்றம் நடைபெற்ற தினேஷ் பாலியின் எஸ்பிஐ வங்கிக் கணக்கையும், அந்தப் பணத்தை அவர் எடுத்த ஏடிஎம்மில் உள்ள கேமரா பதிவையும் போலீஸார் தேடி கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் தினேஷ் பாலியை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் போலீஸார் கடந்த 7 ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரங்கள் விற்பனையில் தான் ஈடுபட்டு வருவதாகவும், தனது நண்பர் முகேஷ் என்பவர் இதுபோன்ற பணப் பரிமாற்றத்துக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் அளிப்பார் என்றும் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள முகேஷை தேடி வருகிறோம். தினேஷ் பாலியின் வங்கிக் கணக்கில் நாடு முழுவதும் இருந்தும் ரூ. 4. 5 லட்சம் வரை பரிமாற்றம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தொகை இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்.