தில்லி ஜல் போர்டு தலைமையகத்தை பாஜக முற்றுகையிட்டு விடியவிடிய போராட்டம்: போலீஸ் பாதுகாப்போடு வெளியேறிய தலைமை அதிகாரி

தலைநகரில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி பாஜக பிரநிதிகள் குழுவினர் தில்லி ஜல் போர்டு (டிஜேபி)

தலைநகரில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி பாஜக பிரநிதிகள் குழுவினர் தில்லி ஜல் போர்டு (டிஜேபி) அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் முற்றுகையிட்டு 10 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். விடியவிடிய நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அலுவலகத்துக்கு உள்ளே சிக்கிய டிஜேபி தலைமைச் செயல் அதிகாரி குமாரை போலீஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது. 
முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தில்லி பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஓ.பி. சர்மா, பாஜக நகர் பிரிவு துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் ஆகியோர், கடந்த 6-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட தில்லி ஜல் போர்டு தலைமை செயல் அதிகாரி குமாரை சந்திக்க தில்லியில் உள்ள டிஜேபி தலைமையகம் சென்றனர்.
அப்போது, இக்குழுவினர் ஆம் ஆத்மிக்கு எதிராக கோஷமிட்டு தலைமையகம் முன்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான டிஜேபி, தலைநகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி குரல் எழுப்பினர். விஜய் கோயல், ஓ.பி. சர்மா மற்றும் கட்சித் தலைவர்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக டிஜேபி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. 
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், "பாஜக குழு டிஜேபி தலைமைச் செயல் அதிகாரியை முற்றுகையிட்டனர். மாசடைந்த குடிநீர் விவகாரத்தை தீர்க்க ஒரு பணிக் குழுவை நியமிக்க உறுதியளிக்கும் வரை இந்த இடத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கமாட்டோம் எனக் கூறினோம். மேலும், அனைத்துப் புகார்களையும் தில்லி ஜல் போர்டு இணையதளத்தில் பதிவேற்றவும், கோடைக்கால செயல் திட்டத்தை வெளியிடுவது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தில்லி ஜல் போர்டு அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. பின்னர் டிஜேபி தலைமைச் செயல் அதிகாரி போலீஸாரை அழைத்தார். அவர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்றனர். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது' என்றார்.
பாஜக எம்எல்ஏ ஓ.பி. சர்மா கூறுகையில், "டிஜேபி தலைமைச் செயல் அதிகாரியின் அறைக்கு பாஜக ஆதரவாளர்களை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் தரைத் தளத்தில் உள்ள அறையின் கதவை டிஜேபி ஊழியர்கள் பூட்டிவிட்டனர்' என்றார்.
போராட்டம் முடிவுக்கு வரும்முன் விஜய் கோயல் கூறுகையில், "குடிநீர் பிரச்னை தொடர்பாக எத்தனை புகார்கள் வரப்பெற்றுள்ளன என்பது குறித்து எவ்வித விவரமும் இல்லை. மேலும், குடிநீர் விநியோகம் இல்லாத மற்றும் மாசடைந்த நீர் விநியோகம் தொடர்புடைய பகுதிகள் குறித்தும் தெரியவில்லை. இந்த நெருக்கடியைச் சமாளிக்க எவ்வித திட்டங்களும் டிஜேபி வசம் இல்லை.டிஜேபி தலைமைச் செயல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்' என்றார்.
அதன் பின்னர், தொடர்ந்து டிஜேபி ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அழைக்கப்பட்டனர். 
முன்னதாக, பாஜக தில்லிப் பிரிவு தலைவர் மனோஜ் திவாரி முதல்வர் கேஜரிவாலுக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் தில்லியில் மின்வெட்டும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதாகவும், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். 
கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "நாட்டிலேயே மிகவும் மலிவான கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தில்லியில்தான் விநியோகம் செய்யப்படுகிறது' என்று தெரிவித்திருந்தார்.

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - தலைமைச் செயல் அதிகாரி 
இதுகுறித்து டிஜேபி தலைமைச் செயல் அதிகாரி நிகில் குமார் கூறுகையில், "பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்னை தொடர்பான புகார்களை குறுகிய காலநேரத்திலேயே சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் துணை மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார்களுக்கு உரிய கால அளவில் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கள அளவிலான அதிகாரிகள் தரப்பில் ஏதும் கவனக்குறைவு இருந்தால் சகித்துக் கொள்ளப்படமாட்டாது. நானும், பிற மூத்த அதிகாரிகளும் நிலைமையை கவனித்து வருகிறோம். நிகழ் கோடைக்காலப் பருவத்தில் மாசு நீர் கலப்பு பிரச்சனை அல்லது குடிநீர் பற்றாக்குறை இல்லை'என்றார்.

பாஜக அரசியலாக்குகிறது - ஜல் போர்டு துணைத் தலைவர் 
தில்லி ஜல் போர்டு துணைத் தலைவர் மொஹானியா கூறுகையில், "ஆனந்த் பர்பத் போன்ற பல பகுதிகள் பூகோளஅடிப்படையில் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பதிப்பதற்கு அனுமதிப்பதில்லை. இந்த விவகாரத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவோர் பொய் கூறுகின்றனர். தில்லி மாநகர் மட்டும் குடிநீர்ப் பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. நாடு முழுவதும் கடுமையான அனல் காற்று வீசுகிறது. குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. எங்கள் சக்திக்கு மீறி நாங்கள் குடிநீரை விநியோகம் செய்து வருகிறோம். குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவில்லை. ஆனால், அதிகமான அனலின் தாக்கம் காரணமாக நீரின் தேவை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நதிகள், ஏரிகள், குளங்கள் வறண்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற சூழலில் மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக பாஜக இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com