சுடச்சுட

  

  இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை: ஹூரியத் மாநாட்டு அமைப்பு வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th June 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று ஹூரியத் மாநாடு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பிஷ்கெக் சென்றுள்ளார். இதேபோல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சென்றுள்ளார்.
  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஹூரியத் மாநாடு அமைப்பின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு அந்த அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
  காஷ்மீரில் நிகழும் வன்முறைக்கு முடிவு கட்டவும், காஷ்மீர் நிலவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம் என்பதை ஹூரியத் மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் தங்களிடையேயான மௌனத்தை கலைத்து, பரஸ்பரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
  காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களை கண்டு ஹூரியத் மாநாடு அமைப்பு கவலையடைந்துள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த வன்முறைகளால், காஷ்மீர் மக்கள் பெரும் துன்பம் அடைந்துள்ளனர் என்றார்.
  உரியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் அதிகாரப்பூர்வமானதாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. பயங்கரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை என்று பாகிஸ்தானிடம் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai