சுடச்சுட

  

  திருட்டு பைக்கில் பெண்ணுடன்  சேர்ந்து தங்கச் சங்கிலி பறிப்பு: துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரை கைது செய்த போலீஸார்

  By DIN  |   Published on : 14th June 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  துப்பாக்கி முனையில் இருசக்கர வாகனத்தைத் திருடி, பெண் கூட்டாளியுடன் சேர்ந்து தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை தில்லி போலீஸார் புதன்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர். போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட அவர்கள் மீது 12 கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
  இதுகுறித்து வடமேற்கு தில்லி காவல் துணை ஆணையர் விஜயந்தா ஆர்யா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சுபாஷ் பிளேஸ் காவல் சரகப் பகுதியில் போலீஸார் புதன்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அர்ஜுன் என்பவர் போலீஸாரைத் தொடர்பு கொண்டு தன்னுடைய வெள்ளைநிற புல்லட் மோட்டார் சைக்கிளை ஸ்ரீகாந்த் (எ) அப்பு எனும் கொடூர கிரிமினல் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுவிட்டதாகக் கூறினார். இதையடுத்து, ரோந்துப் போலீஸார் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் பின்னர், ராஜேஷ் என்பவரும் போலீஸாரைத் தொடர்பு கொண்டு தன்னுடைய இரண்டு தங்கச் சங்கிலிகளை வெள்ளைநிற மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
  இதையடுத்து, இந்த இரு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர், ரிங் ரோடு வழியாக மோட்டார்சைக்கிளில் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் விரட்டிச் சென்று அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து நிறுத்துமாறு எச்சரித்தனர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் அப்பு, போலீஸார் மீது துப்பாக்கியால் தனது பெண் கூட்டாளி உதவியுடன் சுட்டார். இருப்பினும், போலீஸார் தப்பித்துக் கொண்டு, அவர்கள் இருவரையும் எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதன் பிறகும், போலீஸார் மீது அப்பு மீண்டும் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, போலீஸார் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், இருமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அப்பு, தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆனால், அவரது கூட்டாளி பூஜா தப்பியோடிவிட்டார். காயமடைந்த அப்பு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரது கூட்டாளி பூஜாவும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரு தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன. 
  கைது செய்யப்பட்டுள்ள அப்பு, ரோஹிணி செக்டார் 7-இல் வசித்து வருவதும், தில்லியில் பல்வேறு இடங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட 12 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல் உயர் அதிகாரி விஜயந்தா ஆர்யா தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai