தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி: சமாஜவாதி முன்னாள் எம்.பி மீது சிபிஐ வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயன்றது தொடர்பான குற்றச்சாட்டில்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயன்றது தொடர்பான குற்றச்சாட்டில் சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்.பி. அதீக் அகமது மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கட்டுமானத் தொழில் செய்யும் லக்னெளவைச் சேர்ந்த தொழிலதிபர் மோஹித் ஜெய்ஷ்வால் என்பவரை முன்னாள் எம்.பி. அதீக் அகமது அடிக்கடி மிரட்டி பணம் பெற்றுள்ளார். தொழிலதிபரின் நிறுவனங்களை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டியுள்ளார். அவரது டிஜிட்டல் கையெழுத்தையும் ஏமாற்றி பெற்றுள்ளார். அதையடுத்து சில காலம் பணம் பறிப்பதை நிறுத்தியுள்ளார். 
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில் மீண்டும் பணம் கேட்டு ஜெய்ஷ்வாலை மிரட்டியுள்ளார். அப்போது ஜெய்ஷ்வால் மறுத்துள்ளார். ஜெய்ஷ்வாலுக்கு சொந்தமான சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொள்வதாக  அகமது மிரட்டியும், ஜெய்ஷ்வால் பணம் அளிக்கவில்லை. 
அதனால், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி தொழிலதிபர் ஜெய்ஷ்வாலை, அகமது அடைக்கப்பட்டிருக்கும் தேவ்ரியா சிறைக்குக் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரது கையெழுத்தையும் பெற்றுள்ளனர். தொழிலதிபருக்கு சொந்தமான 4 நிறுவனங்களை அகமதுக்கு வேண்டியவர்கள் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக காவல் துறையில் தொழிலதிபர் ஜெய்ஷ்வால் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, சதி திட்டம், ஏமாற்றி  பணம் பறிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் எம்.பி. அகமதுவுக்கு எதிராக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அதையடுத்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறும், அகமதுவை குஜராத் சிறைக்கு மாற்றுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், முன்னாள் எம்.பி. அதீக் அகமது மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com