பள்ளி மாணவர் உதவித் தொகை: மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி
By DIN | Published On : 14th June 2019 06:34 AM | Last Updated : 14th June 2019 06:34 AM | அ+அ அ- |

மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறது. இதுபோன்ற திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி வரவேற்கிறது. குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை திரும்பியுள்ளதை ஆம் ஆத்மி வரவேற்கிறது.
அதே சமயம், மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் மத அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை கவர்வது தொடர்பாக காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டி வந்தது. ஆனால், தற்போது, காங்கிரஸ் போன்றே சிறுபான்மையினரைக் குறித்து வைத்து பாஜகவும் செயல்படுகிறது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறேன் என்றார் சஞ்சய் சிங்.