பிகாரில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: நிதீஷ் குமார் பதவி விலக் கோரி தில்லியில் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 19th June 2019 07:09 AM | Last Updated : 19th June 2019 07:09 AM | அ+அ அ- |

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக் கோரி தில்லியில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயகர் மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே பேசியதாவது: முசாஃபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த பிறகே, முதல்வர் நிதீஷ் குமார் அங்கு பார்வையிடச் சென்றது வெட்கத்துக்குரியது.
இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தைக் கையாள தெரியாத பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே பதவி விலக வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைக்கு மத்திய அரசும், பிகார் அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
முசாஃபர்பூருக்கு அண்மையில் சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மருத்துவமனைகளில் மிக மோசமான நிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.
ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் கூட்ட நெரிசல் உள்ளது. ஒரு படுக்கையில் நான்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போதுமான மருத்துவர்களும், மருந்துகளும் இல்லை. இதுபோன்ற சூழலில், மூளைக்காய்ச்சலை எப்படி எதிர்கொள்ள முடியும்? மூளைக்காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இன்ஸ்டிடியூஷனல் கொலைகளாக கருதப்பட வேண்டும் என்றார் அவர்.
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக, பிகார் பவன் உள்ளுறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், "மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும். இது தொடர்பான விரிவான ஆய்வு நடத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.