எய்ம்ஸ் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினர்

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம்

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்பினர்.
இது குறித்து தில்லியில் உள்ள எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு வங்கத்தில் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவது என அந்த மாநில மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். தில்லியில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமையும் தொடர முடிவு செய்திருந்தோம். 
மேற்கு வங்க மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, நாங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாகப் பணிக்குத் திரும்புவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை எய்ம்ஸ் மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர். 
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்ததைப் போல, மருத்துவர்களின் பாதுகாப்புக்காக உரிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டம் இயற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்க வேண்டி வரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, தில்லியில் மருத்துவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com