கேஜரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு: நாளை விசாரணை

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக பாஜக எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தொடுத்த அவதூறு வழக்கு விசாரணையை ரெளஸ் அவென்யு நீதிமன்றம் ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பஞ்சாபி தொலைக்காட்சிக்கு கேஜரிவால் பேட்டி அளித்திருந்தார். அதில், இந்திரா காந்தியைக் கொலை செய்தது போல, தனிக் பாதுகாவலர்களைக் கொண்டு தன்னை கொலை செய்ய பாஜக திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். 
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த விஜேந்தர் குப்தா, தேர்தலில் போதுமான ஆதரவு இல்லாத விரக்தியில் இதுபோன்று கேஜரிவால் பேசி வருகிறார் என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்த மணீஷ் சிசோடியா, "கேஜரிவாலை கொலை செய்யும் சதியில் விஜேந்தர் குப்தாவுக்கும் பங்கு உள்ளது' எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல் துறையில் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தில்லி முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு விஜேந்தர் குப்தா நோட்டீஸ் அனுப்பினார். 
ஆனால், அதற்குப் பதில் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு, ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ரெளஸ் அவென்யு நீதிமன்ற கூடுதல் பெருநகர தலைமை நீதிபதி சமர் விஷால் அமர்வில் கடந்த ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 
அப்போது, "இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 500 -ஆவது பிரிவின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 24-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மனுதாரரான விஜேந்தர் குப்தாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு ரெளஸ் அவென்யு நீதிமன்றக் கூடுதல் பெருநகரத் தலைமை நீதிபதி சமர் விஷால் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதி சமர் விஷால் விடுப்பில் இருந்ததால், இந்த வழக்கு விசாரணை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com