சுடச்சுட

  

  தமிழக திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 26th June 2019 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திநாத் குமார் வலியுறுத்தினார்.
  மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவர் பேசியதாவது: 
  உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்திருப்பது குறித்து குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2014-இல் 2.6 சதவீதமாக இருந்தது. 2017-இல் இது 3.3 சதவீதத்தை எட்டியது. மத்திய அரசால் அளிக்கப்பட்ட வாய்ப்புகளால்தான் இது சாத்தியமானது.
   உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு தமிழகமும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், பொறியியல், மருந்துகள், ஜவுளி உள்ளிட்ட உற்பத்தித் துறையில் நாட்டின் நான்காவது மிகப்பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
  தொழிற்சாலைகள், தொழில் பணிகள் எண்ணிக்கையில் மாநிலங்களில் தமிழகம் முதலாவதாகத் திகழ்கிறது. தமிழக அரசு நிகழாண்டு ஜனவரி மாதத்தில் நடத்திய இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பொருளாதார நிபுணர்கள், தொழில் துறையினரால் பாராட்டப்பட்டது. 
  இதனால், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக தேவைப்படும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். நாட்டில் வேலையில்லா சூழலைக் கையாளுவதற்கு திறன் பயிற்சி மேம்பாடு மிகவும் அவசியம். 
  தமிழகத்தில் பருவமழை பொய்த்துள்ளது, வறட்சி நிலவுவகிறது. தமிழகம் மட்டுமின்றி பரவலாக நாடு முழுவதும் இந்தப் பிரச்னை உள்ளது. தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆகவே, நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கும் வகையில் ஒரு மசோதாவை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
  மக்களவையில் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம்.செல்வராஜ் பேசியது: மத்திய அரசு வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. குடியரசுத் தலைவர் உரையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் தொகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக டெல்டா மாவட்ட விவசாயிகளிடமிருந்து சாகுபடி நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது முற்றிலும் விவசாய சமுதாயத்திற்கு எதிரானதாகும்.  ஆகவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
  மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா: கடந்த ஆட்சியின் போது தலித்துகள் மீது அடக்குமுறை அதிகமாகின. தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறி வருகிறது. ஆனால், மலத்தை அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் அவல நிலை இன்னும் தொடர்கிறது. குஜராத்தில் கூட சமீபத்தில் இதுபோன்ற பணியில் ஈடுபட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்களும் இந்த வேலையைச் செய்கின்றனர்.
  குடியரசுத் தலைவர் உரையில் சந்திரயான்-2 திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலக் கழிவுகளை மனிதர்கள் அள்ளும் முறையை ஒழிக்க முடியவில்லை. "இந்தியா, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமல்ல. அனைவருக்கும் சொந்தம்' என்று காந்தி கூறினார். அம்பேத்கரும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தினார். 
  ஆனால், இன்றைக்கு புதிய இந்தியா எனும் பெயரில் சுதந்திரமில்லாத, ஒற்றைத் தன்மை கொண்ட அரசியல் சமூக அமைப்பைத் திணிக்கப் பார்க்கின்றனர். இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும். அதையும், அரசியல் சட்டத்தையும் அனைத்துக் கட்சிகளும் பாதுகாக்க வேண்டும்.
  மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்:
  நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 542 இடங்களில், பாஜக 303 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். 
  தேர்தல் ஏழு கட்டங்களாக இரண்டு மாதம் காலம் நடத்தப்பட்டதால் தேர்தல் ஆணையத்திற்கான கடினப் பணி மட்டுமின்றி, நேரமும் அதிகமாக எடுத்துக்கொள்கிறது. இதனால் அதிக செலவும் ஏற்படுகிறது. 
  மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஏறக்குறைய 44 நாள்கள் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமும், வதந்தியும் உருவாக இடமளிக்கிறது. இதுபோன்று தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்துவதைத் தவிர்த்திருந்திருக்க முடியும். 
  எனவே, எதிர்காலத்தில் நீண்டகால தேர்தல் அட்டவணை கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai