சுடச்சுட

  

  பாஜக தலைவர் விஜேந்தர் குப்தாவின் மனைவியிடம் வழிப்பறி

  By DIN  |   Published on : 26th June 2019 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தாவின் மனைவி ஷோபா குப்தாவிடம் தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை வழிப்பறி நடந்துள்ளது.
  விஜேந்தர் குப்தாவின் மனைவி ஷோபா குப்தா. இவர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தனது கைப்பை வழிப்பறி செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.
  இது தொடர்பாக ஷோபா குப்தா கூறுகையில், "செவ்வாய்கிழமை காலை வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர், எனது காரில் இருந்து டீசல் ஒழுகுவதாகத் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, நானும் எனது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகியோரும் காரை விட்டு இறங்கி பார்வையிட்டோம். இச்சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய அவர்கள், காரில் இருந்த எனது கைப்பை உள்ளிட்ட உடமைகளைத் திருடிக் கொண்டு சென்று விட்டன' என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


  மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி 
  தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் மனைவிக்கே தில்லியில் பாதுகாப்பு இல்லாதபோது, தில்லி மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும் என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
  இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதிஷி தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "தில்லியில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. தில்லியில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான மத்தியஅரசு இந்த விவகாரத்தில் மௌனமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 220 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பத்துக்கே தில்லியில் பாதுகாப்பு இல்லாத போது, மற்ற மக்களின் பாதுகாப்புக்கு என்ன நிச்சயம்' என்றார்.
   ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் பரத்வாஜ் கூறுகையில், "தில்லியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைவு தொடர்பாக ஆம் ஆத்மி புகார் எழுப்பும் போதெல்லாம், முதல் ஆளாக வந்து தில்லியில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என விஜேந்தர் குப்தா கூறுவார். அவரின் மனைவியிடமே வழிப்பறி நடந்துள்ளது முரண் நகையானது' என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai