சுடச்சுட

  

  பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற போதிய மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் குற்றம்சாட்டினார். மேலும், 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை அழற்சி நோயால் இறந்திருக்கக் கூடும் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.
  இந்த விவகாரம் தொடர்பாக முசாஃபர்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய  பினோய் விஸ்வம், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
  ஏழ்மை, ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதார வசதிக் குறைவு ஆகியவற்றால் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் குழந்தைகள் இறப்பது ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. மூளை அழற்சி நோய் குறித்து மருத்துவர்களிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடமும் கலந்துரையாடினேன். இறந்த குழந்தைகளின் சிலரது வீடுகளுக்குச் சென்று வந்தேன். 
  மூளை அழற்சி நோயால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 150 என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கக் கூடும். இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே பதில் அளித்துள்ளார். அதில், மூளை அழற்சி நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2016-இல் 102 குழந்தைகள், 2017-இல் 54 குழந்தைகள், 2018-இல் 33 குழந்தைகள் இறந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார். ஆனால், முசாஃபர்பூரில் குழந்தைகள் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் எண்ணிக்கை உயர்ந்து வருகிறதே தவிர, குறையவில்லை. மருத்துவ வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்திருப்பதாக மத்திய அரசும், பிகார் அரசும் கூறி வந்தாலும், கள அளவில் அவ்வாறு இல்லை என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai