இளம்நிலை பட்டப் படிப்பில் ஹிந்தி யுஜிசி சுற்றறிக்கையை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கல்லூரிகளில் இளம்நிலை பட்டப் படிப்பில் ஹிந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக

கல்லூரிகளில் இளம்நிலை பட்டப் படிப்பில் ஹிந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 இது குறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய கல்விக் கொள்கை 2019 -இல் தெரிவிக்கப்பட்ட ஹிந்தி திணிப்புக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசு பின் வாங்கியது. இதுபோன்ற சூழலில், கல்லூரிகளில் இளம்நிலை பட்டப் படிப்பில் ஹிந்தி மொழிப்பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக பல்கலைகழக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) சுற்றறிக்கை பிற மொழி பேசும் மக்களிடையே பிரச்னையை உருவாக்கும். யுஜிசியின் இதுபோன்ற செயல்பாடு ஒற்றுமையைச் சீர்குலைக்கும். எனவே, அனைத்து மொழி, பண்பாட்டு மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்க, கல்லூரிகளில் இளம்நிலை பட்டப் படிப்பில் ஹிந்தி மொழிப்பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக யுஜிசியின் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜேஎன்யு விளக்கம்: இதற்கிடையே, ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) இளங்கலைப் படிப்பில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று அப்பல்கலை.யின் பதிவாளர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார். 
 இது அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்கலை.யில் இளங்கலை, மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ஹிந்தியைக் கட்டாயமாக்கியுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. ஜேஎன்யு நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அண்மையில், பல்கலைக் கழக மானியக் குழு, பல்கலைக் கழகங்களில் ஹிந்தி கற்பிப்பது தொடர்பாக கருத்துக் கேட்டிருந்தது. ஜேஎன்யு நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், "பல்கலைக்கழகங்களில் ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டத்தை மாணவர்களின் எதிர்ப்பால் ஜேஎன்யு நிர்வாகம் கைவிட்டுள்ளது. 
மாணவர் நலனுக்கு எதிராக ஜேஎன்யு துணைவேந்தர், நிர்வாகக் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்ப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com