மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கேஜரிவால் உத்தரவு

தில்லியில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தில்லியில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். தில்லிக்கான வெள்ளத் தடுப்பு உத்தரவு அறிக்கையை முதல்வர் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது: 
தில்லியில் வெள்ளத்தைத் தடுப்பதற்கான உத்தரவுகளை அமல்படுத்துவதில் அனைத்துத் துறைகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை காலத்தில் தில்லியில் எந்தப் பகுதியிலும் மழை நீர் தேங்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 
மேலும், வழக்கமாக மழை நீர் தேங்கும் பகுதிகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மழை நீர் தேங்குவதைத் தடுக்க முடியாத பகுதிகள் குறித்தும் பதிவு செய்ய வேண்டும். 
குறிப்பாக யமுனைக் கரையோரங்களில் உள்ள மக்கள் குறித்து அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். யமுனையில் நீர்மட்டம் அதிகரிக்கும் போது, அதையொட்டிய பகுதிகளில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
மேலும், தில்லியில் மழை நீர் தேங்கும் பகுதிகள் தொடர்பாக ஆய்வு செய்து ஒரு வாரத்தில் தில்லி தலைமைச் செயலர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர். தில்லி தலைமைச் செயலர் விஜய் தேவ் பேசுகையில், "தில்லியில் மழை நீர் தேங்கும் பகுதிகள் குறித்து கடந்த ஆண்டு பத்திரிகைகளில் புகைப் படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு அவ்வாறு வெளியாகாத வகையில் மழை நீர் தேங்கும் பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com