வன்முறையால் பக்தியைப் பரப்ப முடியாது

"அன்பின் மூலமே பக்தியை மக்களிடம் பரப்ப முடியும்; வன்முறை மூலம் பரப்ப முடியாது' என மத்திய

"அன்பின் மூலமே பக்தியை மக்களிடம் பரப்ப முடியும்; வன்முறை மூலம் பரப்ப முடியாது' என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சாவான் மாவட்டத்தில் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை கும்பல் ஒன்று கடந்த 18-ஆம் தேதி தாக்கியது. அன்சாரியைக் கடுமையாகத் தாக்கிய அந்த கும்பல், "ஜெய் ஸ்ரீராம்' என்றும், "ஜெய் ஹனுமான்' என்றும் கூறும்படி வற்புறுத்தியது. அன்சாரி அடித்துத் துன்புறுத்தப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்சாரியின் கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, தில்லியில் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மக்களிடையே அன்பின் மூலமே பக்தியைப் பரப்ப முடியும். அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி "ஜெய் ஸ்ரீராம்' என்று உச்சரிக்க வற்புறுத்தக் கூடாது. இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற அழிவுஏற்படுத்தக் கூடிய செயல்கள், நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
மத்திய அரசின் நல்லாட்சிக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்திலேயே இதுபோன்ற செயல்களில் சில நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஹஜ் பயணம்: இந்தாண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதுதான் சுதந்திர இந்தியாவில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். அவர்களில் 48 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 2,340 பெண்கள், ஆண்துணை இல்லாமல் தனியாகப் பயணம் மேற்கொள்கின்றனர். 1.40 லட்சம் பேர் இந்திய ஹஜ் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டும், 60 ஆயிரம் பேர் தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதியாக 500க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மெக்காவில் 16 சுகாதார மையங்களும், மதீனாவில் 3 சுகாதார மையங்களும் அமைக்கப்பட உள்ளன என்றார் நக்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com