ஜார்க்கண்ட் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: தில்லி வக்ஃபு வாரியம் அறிவிப்பு
By DIN | Published On : 28th June 2019 06:07 AM | Last Updated : 28th June 2019 06:07 AM | அ+அ அ- |

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் தாக்குதல் சம்பத்தில் கொல்லப்பட்ட தப்ரஸ் அன்சாரியின் குடும்பத்துக்கு தில்லி வக்ஃபு வாரியம் ரூ.5 லட்சம் உதவித் தொகையும், அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரஸ் அன்சாரி. இவர் கடந்த வாரம் 18-ம் தேதி ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் போது, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு கும்பல் அவரைத் தாக்கும் விடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு தில்லி வக்ஃபு வாரியம், ரூ.5 லட்சம் உதவித்தொகையை அறிவித்துள்ளது. மேலும், அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான அமானதுல்லா கான் வியாழக்கிழமை கூறுகையில், "தப்ரஸ் அன்சாரியின் மரணம் துரதிருஷ்டவசமானது. அவரது மரணத்தால் நிராதரவாகியுள்ள அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவருக்கு சட்ட உதவிகளும் வழங்கப்படும்' என்றார்.