தில்லி அரசுப் பள்ளிகளில் ஜூலை 1 முதல் தொழில் முனைவு பாடத் திட்டம் அமல்
By DIN | Published On : 28th June 2019 06:07 AM | Last Updated : 28th June 2019 06:07 AM | அ+அ அ- |

தில்லி அரசு பள்ளிகளில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொழில் முனைவு பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக தில்லி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களை எதிர்காலத்தில் வேலை வழங்குநர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தில்லி அரசு பள்ளிகளில் தொழில் முனைவு பாடத்தை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தில்லியில் உள்ள 1, 024 அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இப்பாடத் திட்டம், 9-12 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
இது கட்டாயப் பாடமாகும். ஆனால், தேர்வு நடத்தப்படாது. மாணவர்களுக்கு தினமும் 40 நிமிடங்கள் இந்தப் பாடம் கற்பிக்கப்படும். மேலும், இந்தப் பாடத்தை கற்கும் மாணவர்களுக்கு மாதந் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் பணத்தை வைத்து அவர்கள் தொழில் முனைவு தொடர்பாக செயல்களை சோதனை ரீதியாகச் செய்து பார்க்கலாம் என்றனர்.
இந்த தொழில்முனைவுப் பாடத் திட்டம் உருவாக முக்கிய காரணமானவர்களில் ஒருவரான தில்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "இந்தப் பாடத்தைப் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி முடித்து தொழில் முனைவர்களாக உருவாகுவார்கள். இவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், பிறருக்கு வேலை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
இது தொடர்பான மாதிரித் திட்டம் ஏப்ரல் 1 முதல் 10-ஆம் தேதி வரை தில்லியில் உள்ள 24 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 480 ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.