தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிரானஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தில்லி சட்டப்பேரவைத் தலைவர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸுக்கு

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தில்லி சட்டப்பேரவைத் தலைவர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ தேவேந்தர் ஷெராவத் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி பிஸ்வாஸன் சட்டப்பேரவை ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினராக இருப்பவர் தேவேந்தர் ஷெராவத். கட்சி தன்னை புறக்கணிப்பதாகவும், அவமதிப்பதிக்காவும் குற்றம்சாட்டி, மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் கடந்த மே 6-ஆம் தேதி இணைந்தார். இதனிடையே, காந்தி நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அனில் வாஜ்பாயும் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயலுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுவது குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தேவேந்தர் ஷெராவத்துக்கும், அனில் வாஜ்பாயுக்கும் பேரவைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். 
இதைத் தொடர்ந்து, தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக தேவேந்தர் ஷெராவத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இன்னும் இணையவில்லை எனத் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய கோடைக்கால அமர்வு முன் மனுதாரர் தேவேந்தர் ஷெராவத் சார்பில் மூத்த வழக்குரைஞர் சோலி சோராப்ஜி வியாழக்கிழமை ஆஜராகி மனுவை விரைந்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com