1000 பேருந்துகளில் விசைத் தூக்கிகள் அமைக்க கூடுதல் நிதி: தில்லி அமைச்சரவை ஒப்புதல்
By DIN | Published On : 02nd March 2019 06:26 AM | Last Updated : 02nd March 2019 06:26 AM | அ+அ அ- |

தில்லி அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஏற 1000 விசைத் தூக்கிகள் (ஹைட்ராலிக் லிப்ட்கள்) அமைப்பதற்கு ஏற்பட்ட கூடுதல் தொகையை ஒதுக்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு தில்லி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தில்லி அரசின் 1000 சாதாரண பேருந்துகளில் விசைத் தூக்கிகள் அமைக்க தலா ஒரு பேருந்துக்கு ரூ. 3.63,396 கூடுதல் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 1000 பேருந்துகளுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 36,33,96,000-யை ஒதுக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு இந்த விசைத் தூக்கிகளைப் பராமரிக்கும் செலவும் இதில் அடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தில்லி அரசு பேருந்துகளில் விசைத் தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தன. இதன் அடிப்படையில் தில்லியில் உள்ள சாதாரண அரசு பேருந்துகளில் சக்கர நாற்காலி பயணிகள் ஏற அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விசைத் தூக்கிகளைப் பொருத்த தில்லி அரசு முடிவு செய்தது.